ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்த பின்னும் பெண் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கிய ஈரான் அரசு!
ஈரானில் தனது கணவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பெண் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்த பின்பும் அவர் சடலம் தூக்கிலிடப்பட்டு உள்ளது.
ஈரானில் வசித்து வரக்கூடிய சாரா இஸ்மாயில் என்பவரின் கணவர் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சாரா தன்னையும் தனது மகளையும் தவறாக நடத்தியதாக கூறி தனது கணவரை கொலை செய்துள்ளார். அதன் பின் இந்த கொலை குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். உளவுத்துறை அதிகாரியான சாராவின் கணவரை கொலை செய்ததற்காக சாராவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் நிறைவேற்றப்படும் நாள் அன்று சாராவுக்கு முன்பதாக 16 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இந்த 16 பேரது மரணத்தையும் சாரா கண்முன்னே காணவேண்டும், அதன்பின்தான் சாராவும் தூக்கிலிடப்படுவார் என கட்டாயப்படுத்தப்பட்டார்.
தன்னால் பார்க்க முடியாது எனக் கூறினாலும் கட்டாயப் படுத்தப்பட்ட நிலையில் சாரா அவர்களின் மரணத்தை கண்ணால் பார்த்து உள்ளார். ஒரு கட்டத்தில் திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு தூக்கிலிடப்படுவதற்கு முன்பதாகவே சாரா உயிரிழந்துள்ளார். ஆனால் ஒருவரை கொலை செய்துவிட்டால் அதற்குப் பழிக்குப் பழியாக அந்த கொலை குற்றவாளியும் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஈரானில் பின்பற்றக்கடிய ஒரு சட்டம். எனவே உயிரிழந்த பின்பும் சாரா என்னும் அப்பெண்மணியை ஈரான் அரசு தங்களது சட்டத்தில் உள்ளபடி அவரது உடலை தூக்கில் தொங்க விட்டுள்ளனர். உயிரிழந்த பின்பும் சடலத்தை தூக்கிலிட்டு உள்ள ஈரான் அரசின் சட்டம் பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.