Afghan:ஐபிஎல் ஒளிபரப்ப தடை – தலிபான்கள் எச்சரிக்கை…காரணம் என்ன தெரியுமா?..!
ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.அதற்கான காரணம் இதுதான்.
உலகின் மிக இலாபகரமான மற்றும் முக்கியமான கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான்கள் தற்போது தடை விதித்துள்ளனர்.
ஐபிஎல் போட்டிகளில் இடம் பெறும் நடனம் மற்றும் அரங்கங்களில் பெண் பார்வையாளர்கள் இருப்பதை மேற்கோள் காட்டி ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் ஐபிஎல் ஒளிபரப்பப்படுவதற்கு எதிராக தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்லாமிய கட்டமைப்பிற்குள் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்று தலிபான்கள் வலியுறுத்தியது.ஆனால்,அதற்கு மாறாக பெண்களுக்கு பல்வேறு உரிமைகளை மறுத்து வருகிறது.
அந்த வகையில்,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த செய்தி மாநாட்டில் துணை அமைச்சர்கள் பட்டியலை இன்று அரசு செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வழங்கியுள்ளார். இந்த பட்டியலில் ஆண்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.ஆனால்,பெண்கள் பெயரை இதில் குறிப்பிடவில்லை.
மேலும்,கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் புதிய விளையாட்டுத் தலைவர் பஷீர் அஹ்மத் ருஸ்தம்சாய் செய்தி நிறுவனமான AFP இடம் கூறியதாவது:”ஆப்கானிஸ்தானில் 400 விளையாட்டுகள் அனுமதிக்கப்படும்”, என்று கூறினார்.ஆனால் பெண்கள் ஒரு விளையாட்டையாவது விளையாட முடியுமா என்பதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்.மேலும்,இது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு ,”தயவுசெய்து பெண்களைப் பற்றி மேலும் கேள்விகள் கேட்காதீர்கள்” என்று அவர் கூறினார்.
அதேபோல,தலிபான் செய்தித் தொடர்பாளர் முன்னதாக கூறுகையில்: “பெண்கள் அமைச்சர்களாக இருக்க முடியாது, அவர்கள் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்க வேண்டும்”, என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.