மார்ச் – 8: உலக பெண்கள் தினம், காரண காரியம் என்ன?
1857ஆம் ஆண்டு உலகின் பல புரட்சிகளை தலைமை தாங்கி நடத்தி உள்ளது. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தைப் போலவே பெண்களின் விடுதலைக்கு ஒரு பெரும் போராட்டத்தை இந்த ஆண்டு முன்னெடுத்துள்ளது. அமெரிக்காவில் 1857ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி துணி துவைக்கும் பெண் தொழிலாளிகள் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதாவது குறிப்பாக பெண்களுக்கு சம ஊதியம், சரியான வேலை வாய்ப்பு, ஆண்களுக்கு நிகரான வசதிகள் என அனைத்தும் வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், அப்போது அமெரிக்க அரசாங்கம் இதனை இரும்புக்கரம் கொண்டு ஓடுக்கியது. இருந்தாலும் பெண் விடுதலைக்கான தீ அன்றுடன் ஓய்ந்துவிடவில்லை.
அதன் பின்னர் 50 ஆண்டுகள் கழித்து 1907 ஆம் ஆண்டு உலக சோசலிச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெண்கள் டென்மார்க் நாட்டில் சம உரிமை, சம ஊதியம் கேட்டு போராடத் தொடங்கின. இந்த மாநாட்டில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினர். இந்த மாநாட்டில் ஜெர்மனியின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கிளாரே செர்கினே மார்ச் 8ம் தேதியை உலக மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று பேசி தீர்மானத்தை நிறைவேற்றினார்.
அதன் பின்னர் 1920ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்சாண்டிரா மார்ச் 8ம் தேதியை உலக மகளிர் தினமாக பிரகடனம் செய்தார். அதன்பின்னர் 1921 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.1975ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்து ஐநா சபை பெருமைப்படுத்தியுள்ளது.
பெண்களின் ஆற்றல் பெரிதும் வீணடிக்கப்படுகிறது அல்லது சுரண்டப்படுகிறது. சமையலறையிலேயே பல நூறு ஆண்டுகாலம் கழித்து வரும் அவர்கள் கடந்த சில நூற்றாண்டுகளாக தங்களது முன்னேற்றத்தை உலகில் காட்டியுள்ளனர். உலகின் பல பகுதிகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் பெண்களே. உள்ளூரில் நடக்கும் பத்தாம் வகுப்பு தேர்வு முதல் உலக அளவில் நடக்கும் தேர்வுகள் வரை அனைத்திலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரான இடத்தை பிடிக்கின்றனர். பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு நிகரானவர்களே. அவர்களது இறகுகளை கட்டிவைக்காமல் அவிழ்த்து விடுவோம். அவர்கள் சிறகடித்து பறந்து அவர்களின் முடிவை எடுத்துக் கொள்வார்கள்.