கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை – வடகொரியா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதார தடை!
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுவதற்காகவே ஏவுகணை சோதனை நடத்த வடகொரியா அதிபர் கிம் உத்தரவு என தகவல்.
நேற்று முன்தினம் வடகொரியா கிழக்கு கடற்பகுதியில் அதிவேக ஏவுகணை சோதனை ஒன்றை அந்நாட்டு அரசு நடத்தியது. இந்த சோதனை கொரிய தீபகற்பம், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது என்று தென்கொரியா விமர்சித்திருந்தது.
வடகொரிய அதிபர் கிம்மின் உத்தரவின்படி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஹ்வாசாங்-17 என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என்றும் பரிசோதனையின்போது அதிபர் கிம் மேற்பார்வையிட்டார் எனவும் வடகொரியா அரசு விளக்கம் தெரிவித்திருந்தது.
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுவதற்காகவே இந்த ஏவுகணை சோதனை நடத்த வடகொரியா அதிபர் கிம் உத்தரவிடப்பட்டிருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இந்தாண்டு வடகொரியா இதுவரை 10 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அத்துமீறல் என்று ஐக்கிய நாடுகள் சபை விமர்சித்துள்ளது.
இந்த நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிவேக ஏவுகணையை வட கொரியா பரிசோதனை செய்ததை அடுத்து, அந்நாட்டு நிறுவனங்களின் மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.