இந்தோனேசியா சிறையில் பயங்கர தீ விபத்து – 41 கைதிகள் உயிரிழப்பு!
இந்தோனேசியாவிலுள்ள சிறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 41 கைதிகள் பரிதமாக உயிரிழந்துள்ள நிலையில், 39 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் உள்ள பாண்டேன் எனும் மாகாணத்தில் உள்ள டேங்கராங் சிறையில் போதை பொருள் கடத்தல் கைதிகள் பலர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்படுவதற்கான வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சிறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீ மளமளவென்று அனைத்து இடங்களிலும் பரவியதால், சிறைச்சாலையில் இருந்த கைதிகள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின் பொழுது 122 கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த தீ விபத்தில் 41 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 39 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பதாக தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இந்தோனேசிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.