இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி தரமுடியாது – அமெரிக்கா!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அனுமதி மறுப்பு.
- கூடுதல் தரவுகளுடன் உயிரி உரிமை விண்ணப்ப வழியில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.
இந்தியாவிலுள்ள ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட கூடிய கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும், இந்த தடுப்பூசி மூன்றாவது கட்ட பரிசோதனை இன்னும் வெளி வராமல் உள்ளது. சாதாரணமாகவே ஒரு தடுப்பூசிக்கு உலக அளவில் அங்கீகரம் கிடைக்க வேண்டுமானால், அதற்கு எப்டிஏ,உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மருந்து கட்டுப்பாடு நிறுவனத்தின் அனுமதி ஆகியவை அவசியம்.
ஆனால் இந்த அமைப்புகளின அங்கீகாரம் கிடைக்காத கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாம் தவணை டோஸ் செலுத்தி கொண்டவர்கள் கூட தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களாக தான் பிற நாடுகளால் கருதப்படுகின்றனர். இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக அமெரிக்காவில் உள்ள தனது பங்கு நிறுவனமான ஒகுஜன் மூலம் பாரத் பயோடெக் நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
எனவே ஒகுஜன் நிறுவனம் அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டில் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்துள்ளது. ஆனால் இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த எப்டிஏ அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி தர முடியாது என மறுத்துள்ளது. மேலும் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் குறித்த கூடுதல் விவரங்களுடன் உயிரி உரிம விண்ணப்பம் நடைமுறையில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.