கொரோனாவுக்கு பயந்து அமெரிக்க விமான நிலையத்தில் மூன்று மாதங்கள் பதுங்கி வாழ்ந்த இந்தியர் கைது!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து அமெரிக்காவில் உள்ள விமான நிலையத்தில் தங்கியிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் காவல்துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒரு வருட காலமாக உலகமே நடுங்கி போயிருக்கிறது. பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், கோடிக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தற்போது வரையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கான மருந்துகள் கண்டறியப்பட்டுளளது என பல இடங்களில் அனுமதிக்கப்பட்டு வந்தாலும், இந்த மருந்துகள் மூலமாகவும் சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதுதான் ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாக இருந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவுக்கு பயந்து பல பணக்காரர்கள் வெளியிடங்களில் சென்று தங்கி வருகின்றனர், சிலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அது போல இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆதித்யா சிங் எனும் ஒருவர் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி சிகாகோ நகரில் உள்ள விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
கொரோனா வைரஸ்க்கு பயந்து அங்கேயே தங்கி இருந்துள்ளார். விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகம் உள்ள பகுதியில் தங்கியிருந்த அவரை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்துள்ளனர். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பதாக விமான நிலைய அதிகாரியின் தொலைந்துபோன ஐடி கார்டை காண்பித்து இதுதான் நான் என கூறியுள்ளார். இவர் சொல்வது பொய் என கண்டறிந்த அதிகாரிகள் ஆதித்யா சிங்கை பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல், தடைசய்யப்பட்ட பகுதியில் தங்கியிருத்தல், அதிகாரிகளின் அடையாள அட்டையை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அதன் பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மருத்துவம் மேலாண்மை படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர் எனவும் வேலை இல்லாமல் இருந்த அவர் கொரோனா அச்சத்தில் அக்டோபர் 19ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதியில் வரையிலும் விமான நிலையத்திலேயே தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து நீதிமன்றத்தில் காவல்துறையினர் இவரை ஆஜர் படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு குற்றப்பின்னணி ஏதும் இல்லாவிட்டாலும், ஒரு பன்னாட்டு விமான நிலையத்தில் எப்படி மூன்று மாதங்கள் ஒருவர் தங்கியிருந்தார் என பாதுகாப்பு அதிகாரிகளிடம் நீதிபதி சூசன்னா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தடை செய்யப்பட்ட பகுதியில் பதுங்கி இருந்ததால் ஆதித்யா சிங்கை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், ஜனவரி 27-ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் எனவும், அப்போது ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமாக கட்டினால் பெயிலில் விடுவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.