இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதனை!
இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றதால் , அந்த மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றியும் சாதனை படைத்துள்ளது.
போர்ட் எலிசபெத்தில் நேற்று நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பந்துவீசத் தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஷிகர் தவான் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா 115 ரன்களைக் குவித்தார்.
விராட் கோலி 36 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 30 ரன்களும் சேர்த்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களைக் குவித்தது. கிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் அம்லா 71 ரன்களும், மார்க்ராம் 32 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த டும்னி, டிவில்லியர்ஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், மில்லர் 36 ரன்களும், க்ளாசன் 39 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், அந்த அணி 42.2 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளையும், பாண்டியா, சகால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 4-1 என தொடரில் முன்னிலை வகிப்பதுடன், தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.