அருமை…வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை;100% ஊதியம்!எங்கு தெரியுமா?..!
இங்கிலாந்து முழுவதும் 70 நிறுவனங்களை சேர்ந்த 3000 ஊழியர்களுக்கு முழு ஊதியத்துடன் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்,ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பாஸ்டன் கல்லூரி ஆராய்ச்சியாளர்களுடன் 4 டே வீக் குளோபல் இணைந்து இத்திட்டத்தை நடத்துகின்றன.
அதன்படி,நேற்று முதல் இங்கிலாந்தில் உள்ள வங்கிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கெடுத்துள்ளன. இதன்மூலம்,ஊழியர்கள் தங்கள் அதிகபட்ச உற்பத்தி திறனை வெளிப்படுத்துவார்கள் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு 100% ஊதியத்துடன் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை அளிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
மேலும்,இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் நலனில் ஏற்படும் முன்னேற்றத்தையும் அறிந்து கொள்ள நிறுவன அமைப்பாளர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளனர்.அதே சமயம்,புதிய வேலை முறை உற்பத்தி நிலைகள், பாலின சமத்துவம்,சுற்றுச்சூழல் ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும்,இது தொடர்பாக 4 டே வீக் குளோபலின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோ ஓ’கானர் கூறுகையில்:”குறுகிய நாட்களில் புத்திசாலித்தனமாக வேலை செய்ய முடியும் என்பதை தொழிலாளர்கள் காட்டியுள்ளனர்.கொரோனா தொற்றுநோயிலிருந்து நாம் மீண்டும் வரும் நிலையில்,குறைந்த மணிநேர வேலை ஊழியர்களுக்கு போட்டித்தன்மையை வழங்குவதற்கான வாகனம்” என்று அவர் கூறினார்.
மேலும்,இத்திட்டத்தில் பங்கெடுத்த லண்டனில் உள்ள ஒரு மதுபான ஆலையான பிரஷர் டிராப் ப்ரூயிங்கின் பிராண்ட் மேலாளரான சியன்னா கூறுகையில்:”தனது ஊழியர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதே நிறுவனத்தின் மிகப்பெரிய குறிக்கோள் .ஏனெனில்,கொரோனா தொற்றுநோய் சமயத்தில் வேலை மற்றும் மக்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு ஒழுங்கமைக்கிறார்கள் என்பதைப் பற்றி அதிகம் சிந்திக்க வைத்தது.அதனால்,எங்கள் ஊழியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும்,உலகில் முற்போக்கான மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்கவும் நாங்கள் இதைச் செய்கிறோம்”,என்று விளக்கமளித்துள்ளார்.