எத்தியோப்பியாவுக்கு 411 மில்லியன் டாலர்கள் அவசர கால கடனுதவி வழங்கிய ஐஎம்எப்.!
எத்தியோப்பியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருவதால், மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 411 மில்லியன் டாலர்கள் அவசர கால கடனுதவி வழங்கிய ஐஎம்எப்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை மிரட்டி வருகிறது. தற்போது ஆப்ரிக்க நாடுகளின் பக்கமும் இந்த வைரஸ் திரும்பியுள்ளது. நைஜீரியா, எத்தியோப்பியா, கேமரூன், அல்ஜீரியா, மொரோக்கோ உள்ளிட்ட ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இங்கு பொருளாதார வளர்ச்சியிலும், மருத்துவ வசதியிலும் மிகவும் பின் தங்கியுள்ள ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளை சந்திக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இதன் விளைவு காரணமாக மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேம்படுத்த சர்வதேச நிதியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடனுதவியை எதிர்பார்த்து இருக்கின்றனர். அதுவும், எத்தியோப்பியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அந்நாட்டில் இதுவரை 131 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோன பாதிப்பு குறைவாக இருந்தாலும், அங்கு போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் இன்னும் சில நாட்களில் வைரசின் தாக்கம் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எத்தியோப்பியாவுக்கு 411 மில்லியன் டாலர்கள் அவசர கால கடனுதவி வழங்க ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.