உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அருந்தாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
நம்மில் பலர் உணவு மற்றும் நீர் அருந்துவதன் அவசியத்தை உணராமல், ஏனோ தானோவென எப்பொழுதாவது மட்டும் அவற்றை உட்கொண்டு வருகிறோம்; ஆனால், சரியான அளவு உணவு மற்றும் நீர் இல்லாமல் உடலால் சரிவர இயங்க முடியாது; மற்றும் உடலின் உள்ளுறுப்புகளும் சரிவர இயங்காமல் தீவிர உடல் உபாதைகள் ஏற்படும்.
இவ்வகையில் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அருந்தாவிட்டால், உடலில் என்ன பிரச்சனைகள் நடக்கும் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.
சக்தியிழப்பு
உடலுக்கு சக்தி தருவது உணவு மட்டுமல்ல; நீரும் தான். உடலுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை எனிலும் கூட உடலால் சரிவர இயங்க முடியாது. உடலில் பாயும் திரவமான இரத்தத்திலிருந்து, உடலையே இயக்கும் மூளை வரையிலான அனைத்து உறுப்புகளின் இயக்கத்திற்கும் தண்ணீர் என்பது இன்றியமையாத தேவையாகும்.
உடலுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை எனில், உடலின் இயக்கமே ஸ்தம்பித்து விடும்.
பலவீனம்
நீங்கள் உடலுக்கு தேவையான நீரை பருகாவிட்டால், அன்றாட வேலைகள், சிறு சிறு வேலைகள் செய்யும் பொழுது கூட பலவீனமாக உணர்வீர். இதைத்தடுக்க நன்கு நீர் பருகுங்கள்!
அதீத பசி – அதீத எடை
தண்ணீரை போதிய அளவு பருகாவிட்டால் அது அதிக சக்தியிழப்பை ஏற்படுத்தும்; அதிக சக்தியிழப்பால் அதிக உணவு உண்ணும் நிலை உண்டாகும், இது உடல் எடையை அதிகரிக்கும்.
ஒரு விஷயத்தை சரியாக செய்யாததால், எத்தனை பிரச்சனைகள் ஏற்படுகிறது பாருங்கள், இப்பிரச்சனைகளை தவிர்க்க நீர் பருகுதல் எனும் ஒரு விஷயத்தை செய்தாலே போதும்.
மறதி
போதுமான அளவு நீர், அதாவது இரத்தத்தின் வழியாக ஆக்சிஜன் கிடைக்கவில்லை எனில் மூளையின் செயல்பாடு பாதித்து, நினைவாற்றல் குறைந்து – மறதி ஏற்படும். மறதியின்றி வாழ்க்கையை வாழ, உடலுக்கு தேவையான நீரை அருந்துங்கள்.
சளி – காய்ச்சல் நோய்கள்
உடலுக்கு போதிய நீர்ச்சத்து கிடைக்கவில்லை எனில், விருந்தாளி நோய்களான சளி, காய்ச்சல் போன்றவை நிரந்தர வசிப்பாளர்களாக உங்கள் உடலில் தங்கி விடுவர்; ஆகையால் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்.
செரிமானம் – மலம்
உடலின் நீர்ப்பற்றாக்குறையால் செரிமான நிகழ்வு பாதிக்கப்பட்டால், மலம் மற்றும் மலக்குடல் தொடர்பான பிரச்சனைகள் உங்கள் உடலில் தாண்டவமாடும்.
இந்த எல்லா பிரச்சனைகளையும் தடுக்க, தினந்தோறும் 2-3 லிட்டர் நீர் அருந்த வேண்டும். இப்பதிப்பை படித்த வாசகர்கள், மற்றவர் பயனுற பதிப்பினை பகிர்வீராக! உங்கள் நலம் மேம்பட கூறப்பட்டுள்ள கருத்துக்களை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவீராக!