“தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்” – கே.எஸ் அழகிரி..!

Default Image

காவிரி படுகை விவசாயிகளின் நலனுக்கு விரோதமாகக் கருத்துக்களைக் கூறியிருக்கிற தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் அவர்களை வன்மையாகக் கண்டிப்பதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 

தமிழகத்திற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தரவேண்டிய தண்ணீரை வழங்குவதற்குக் கர்நாடக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

இந்நிலையில்,காவிரி படுகை விவசாயிகளின் நலனுக்கு விரோதமாகக் கருத்துக்களைக் கூறியிருக்கிற தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் அவர்களை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழக மக்களின் நலனுக்கு விரோதம்:

மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 7 ஆண்டு காலமாக தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வெற்றிவாய்ப்பைப் பெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

காவிரி நீரை வீணாக்குவது என்பது தமிழகம் தான்:

அந்த சந்திப்பு குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பத்திரிகையாளர்களுடன் பேசுகையில், “காவிரி நீரை பொறுத்தமட்டில் அதனை வீணாக்குவது என்பது தமிழகம் தான். இதில் நீர் பங்கீட்டை கர்நாடகா சரியாகத் தான் வழங்குகிறது.

கடந்த 2 வருடங்களாகத் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் வீணாகக் கடலில் கலந்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வந்த பிறகு முறையாகத் தமிழகத்திற்குத் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் கிடைத்து வருகிறது” என்று ஆதாரமற்ற கருத்தை, முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கிற வகையில் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:

காவிரி பிரச்சனையைப் பொறுத்த வரை பிப்ரவரி 2018 இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் 177.25 டி.எம்.சி. தமிழகத்திற்கு வழங்கவேண்டும். ஆனால், அந்த நீரை உறுதியாகப் பெற முடியாத நிச்சயமற்ற நிலையில் தான் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் இருந்து வருகிறது.

ஏனெனில்,ஒவ்வொரு ஆண்டும் தீர்ப்பின் அடிப்படையில் மாதாமாதம் வழங்கவேண்டிய நீரை கர்நாடக அரசு வழங்குவதில்லை. எப்போதுமே தென்மேற்கு பருவமழை தொடங்குவதை எதிர்பார்த்து செப்டம்பர் வரை நிலைமையை ஆய்வு செய்த பிறகு தமிழகத்திற்குக் கர்நாடகம் நீரை வழங்கி வருகிறது.

அதேபோல, ஒவ்வொரு ஆண்டிலும் பற்றாக்குறை மாதங்களாக கருதப்படுகிற ஜூன், ஜூலையில் தமிழகத்திற்கு கர்நாடகம் தரவேண்டிய நீரின் அளவு 40.43 டி.எம்.சி. ஆனால் கர்நாடகம் வழங்கியதோ 2019-20 இல் 9.5 டி.எம்.சி. 2020- 21 இல் 17.5 டி.எம்.சி. தான். பற்றாக்குறை மாதங்களில் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் எப்போதும் வழங்குவதில்லை.

வடகிழக்கு பருவமழை:

ஆனால், அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை பெய்கிற காலங்களில் குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கர்நாடகா அணைகளில் உபரியாக நீர் இருப்பதால் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத நிலையில் அதிக அளவில் தண்ணீரை காவிரியில் திறந்து விடுகிறது. இதை ஒட்டுமொத்த கணக்கில் கர்நாடகம் சேர்த்து விடுகிறது.

பற்றாக்குறை காலங்களான ஜூன், ஜூலை மாதங்களில் தரவேண்டிய தண்ணீரைத் தராமல் கடுமையான மழைப்பொழிவு இருக்கிற காலங்களில் தண்ணீரைத் திறந்துவிட்டு தமிழகத்தை வடிகாலாகக் கர்நாடக அரசு கருதுவதை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

 ரூ.6,000 கோடி செலவில் மேகதாது அணை:

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு கீழே மேகதாதுவில் ரூ.6,000 கோடி செலவில் 70 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்கிற அளவுக்கு அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு அனுமதி கோரியிருக்கிறது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது.எனினும்,மேகதாதுவில் அணை கட்டப்படுமேயானால் காவிரிப் படுகை வறண்ட பாலைவனமாக மாறுவதற்கு வழிகோலும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்த விதமான கட்டுமானப் பணிகளையும் எந்த மாநில அரசும் மேற்கொள்ள உரிமை இல்லை.

இந்த சூழலில் மேகதாதுவில் அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு சமர்ப்பித்த உடனே அதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்திருக்க வேண்டும்.

தமிழர் விரோதப் போக்கு:

இந்நிலையில், தமிழகத்திற்கு விரோதமாகச் செயல்படுகிற கர்நாடசு அரசுக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க. தலைவர் குரல் கொடுப்பது அப்பட்டமான தமிழர் விரோதப் போக்காகும்.

காவிரி மேலாண்மை வாரியம்:

அதேபோல, காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்ற ஆணையின்படி தீர்ப்பை நடைமுறைப்படுத்திக் கண்காணிக்க பன்மாநில நீர் தகராறு சட்டம் – 1956 இன் படி அதன் பிரிவு 6யு மூலம் அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் செயல்திட்டம் ஒன்றை உருவாக்கியது.

அதை நிறைவேற்றுவதற்கு காவிரி மேலாண்மை வாரியம் 2018 ஜூன் 1 ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு நீதி 3 முறை போன்ற அதிகாரம் கொண்ட ஆணைக்குழு ஆகும். இதற்கு முழுநேர தலைவர், செயலாளர் மற்றும் பணியாளர்கள் கொண்ட இந்த அமைப்பு முழுநேரமாக செயல்பட்டு காவிரி நீரை பகிர்ந்துகொள்வதை கண்காணித்து ஒழுங்குபடுத்தும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக காவிரி மேலாண்மை வாரியத்திற்கு முழுநேர தலைவரை நியமிக்காமல் மத்திய நீர்வளத்துறை செயலாளரை இதன் தலைவராக செயல்பட கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பிற்கான செலவை மாநில அரசுகள் தான் பகிர்ந்து கொள்கின்றன.

கூட்டாட்சி தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல்:

ஆனால் காவிரி நீரை நியாயமாக பகிர்ந்துகொள்வதைக் கண்காணிக்கிற காவிரி மேலாண்மை வாரியத்திற்கு முழு நேரத் தலைவரைக்கூட கடந்த 3 ஆண்டுகளாக நியமிக்காமல் மிகுந்த அலட்சியப் போக்குடன் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த 2020 ஏப்ரல் 24 அன்று மத்திய அரசின் அறிவிப்பின்படி நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றி ஜல் சக்தி அமைச்சகம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த அமைச்சகத்தின் கீழே காவிரி மேலாண்மை வாரியம் அதற்குக் கட்டுப்பட்ட ஒரு துறையாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை மாநில அரசுகளின் உரிமையைப் பறித்து கூட்டாட்சி தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கிற செயலாகும்.

கர்நாடகம் வழங்குகிற காவிரி நீர் தமிழகத்தில் வீணடிக்கப்படுவதாக முருகன் கூறுகிறார். தமிழகத்தில் காவிரி நீர் வீணடிக்கப்படுவது தி.மு.க. ஆட்சிக்கு வந்த அறுபது நாட்களில் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் ஜூன் 12 ஆம் தேதி காவிரி நீர் திறந்து சமீபத்தில் தான் கடைமடையை அடைந்திருக்கிறது.

அ.தி.மு.க.வின் 10 ஆண்டு ஆட்சிக்கு பொருந்தும்:

பா.ஜ.க. தலைவர் கூறுகிற குற்றச்சாட்டு அ.தி.மு.க.வின் 10 ஆண்டு ஆட்சிக்கு பொருந்துமே தவிர, அறுபது நாள் கூட நிறைவு பெறாத தி.மு.க. ஆட்சிக்கு பொருந்தாது. இத்தகைய குற்றச்சாட்டை தமிழக பா.ஜ.க. தலைவர் கூறுவது தான் மிகவும் விந்தையாகவும், வியப்பாகவும் இருக்கிறது. இதைவிட பச்சை துரோகத்தை தமிழகத்திற்கு பா.ஜ.க. செய்துவிட முடியாது.

கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்:

எனவே, தமிழகத்திற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தரவேண்டிய தண்ணீரை வழங்குவதற்குக் கர்நாடக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் காவிரி படுகை விவசாயிகளின் நலனுக்கு விரோதமாகக் கருத்துக்களைக் கூறியிருக்கிற தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு விரோதமாகக் கூறப்பட்ட கருத்துக்களை அவர் திரும்பப் பெறவில்லை எனில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
2 children HMPV virus
rn ravi sivasankar
RN Ravi - TN Assembly
edappadi palanisamy Who is that sir
ksrtc accident IDUKKI
TN Assembly - RN Ravi