நான் என் நாட்டை நேசிக்கிறேன் ; ஆனால் இங்கு இருந்தால் உயிரிழந்து விடுவேன் – ஆப்கான் பெண் பத்திரிகையாளர்!
ஆப்கானிலிருந்து வெளியேறிய பெண் பத்திரிகையாளர், தனது நாட்டை தான் நேசிப்பதாகவும், ஆனால் நான் பத்திரிகையாளர் என தெரிந்தால் என்னை கொன்று விடுவார்கள் எனவும் அழுதுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கான் நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் தற்பொழுது ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடைபெறுகிறது என அண்மையில் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பெண் பத்திரிக்கையாளர் வஹிடா ஃபைஸி என்பவர் இது குறித்து கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
அப்பொழுது பேசிய அவர், நான் எனது நாட்டை நேசிக்கிறேன்; ஆனால் என்னால் இங்கு இருக்க முடியாது. நான் யார்? என்ன வேலை செய்கிறேன் என அவர்களுக்கு தெரியும், இங்கிருந்தால் நிச்சயம் என்னை கொன்று விடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இனி நான் இங்கு திரும்பி வரவே மாட்டேன். இனி இது என் நாடு கிடையாது எனவும் அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.