கடைசி நிமிடம் வரை எனக்கு தெரியாது.. நான் பலிகடா ஆக்கப்பட்டேன் – முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர்!

Default Image

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியமைக்கும் போது, அந்நாட்டை விட்டு வெளியேறியது குறித்து முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி விளக்கம்.

ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது. அமரிக்க வீரர்களுக்கு ஆண்டுதோறும் பல பில்லியன் டாலர் பணம் இழக்க நேரிட்டதால் படைகளை திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆப்கனில் இருக்கும் அமெரிக்கப் படைகள் படிப்படியாக சொந்த நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினர்.

இதுதான் சரியான தருணம் என்ற எண்ணத்தில் ஆப்கானிஸ்தானில் ஒடுங்கி இருந்த தலிபான்கள் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கி, பல இடங்களை கைப்பற்றி வந்தது.  தலிபான்கள் தாக்குதலால் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சமயத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக அமெரிக்கப் படை வெளியேறியது.

இதன்பின், சில வாரங்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இறுதியாக கடந்த ஆகஸ்ட் 15-ல் தலைநகர் காபூலை கைப்பற்றிய தாலிபான்கள், ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது ஆட்சியை நிலைநாட்டினர்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நேரத்தில், அந்நாட்டு அதிபராகக் கடந்த 2014 முதல் இருந்து வந்த அஷ்ரப் கனி அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்தார். இவர் நாட்டை விட்டு செல்லும்போது பணம், தங்கம் மற்றும் சொகுசு கார்களுடன் ஹெலிகாப்டரில் தப்பி சென்றதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பிரபல ஊடக நிறுவனத்திடம் மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். அந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஆக.15 நாட்டை கைப்பற்றிய அன்று காலை வரை, அதுதான் எனக்கு ஆப்கனில் கடைசி நாளாக இருக்கும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

தலைநகர் காபூலை கைப்பற்றி தனது சொந்த அரசாங்கத்தை வீழ்த்திய நாள், தனது கடைசி நாளாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. புறப்படும் வரை நாட்டை விட்டு வெளியேறுவது தனக்குத் தெரியாது. ஆனால், அன்று பிற்பகலில் தான் அதிபர் மாளிகையின் பாதுகாப்பு இழந்தது.

நான் ஒரு நிலைப்பாட்டை அங்கு எடுத்திருந்தால், பாதுகாப்பில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள். மேலும் அவர்களால் என்னை பாதுகாக்க முடியாது. அந்த சமயத்தில் எனது தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஹம்துல்லா மொஹிப், உண்மையில் பயந்து, எனக்கு இரண்டு நிமிடங்களுக்கு மேல் கொடுக்கவில்லை.

தென்கிழக்கு கோஸ்ட் நகருக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல வேண்டும் என்பதே அவரது அறிவுறுத்தலாக இருந்தது. ஆனால், அந்த நகர் உட்பட பல்வேறு மாகாண தலைநகரும் தாலிபான் கட்டுப்பாட்டுக்கு வந்ததால் நாங்கள் எங்கு செல்வோம் என்று எனக்கு தெரியவில்லை, புறப்படும் முன்புதான் என்னை ஐக்கிய அமீரகம் அழைத்துச் செல்வதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார்.

அன்றில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வருகிறேன். நான் ஆப்கானை விட்டு புறப்படும் போது பணம், நகைகள் எடுத்து சென்றதாக கூறுவது தவறானது. மிக மோசமான சூழல் ஏற்படக் கூடாது என்பதே எனது முதல் இலக்காக இருந்தது.  நாட்டில் இருந்த வன்முறையால் ஏற்கனவே காபூலில் அகதிகள் நிரம்பியிருந்தனர்.

இதனால் நான் மேலும் அவர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை. நாட்டை விட்டு வெளியேறுவது என்பது மிகக் கடினமான ஒரு முடிவு. காபூலைக் காப்பாற்றவும், அது என்னவென்பதை அம்பலப்படுத்தவும் நான் என்னையே தியாகம் செய்ய வேண்டியிருந்தது. வன்முறை சதி, அரசியல் உடன்பாடு அல்ல.

ஆட்சி அதிகாரத்தில் உடன்பாடு செய்து கொள்வதாக தெரிவித்த தாலிபான்கள், அதைச் செய்யாமல் ஆட்சியைக் கவிழ்த்தனர். நான் நாட்டைவிட்டு புறப்படாமல் அங்கேயே இருந்தால் கூட நிலைமை எந்த விதத்திலும் மாறியிருக்காது. தாலிபான் ஆட்சியில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்படவே செய்திருக்கும்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக நான் முழு கெட்டவனாக ஆக்கப்பட்டேன். இது ஒரு அமெரிக்க பிரச்சினையாக மாறியது. ஆப்கன் பிரச்சினை அல்ல. எனது வாழ்க்கைப் பணி அழிக்கப்பட்டது, எனது மதிப்புகள் மிதிக்கப்பட்டுள்ளன, நான் பலிகடா ஆக்கப்பட்டேன் என மனம்விட்டு தெரிவித்தார். மேலும், ஆப்கானியர்கள் என்மீது பகிரங்க குற்றசாட்டை வைத்தனர். ஆப்கன் மக்களின் கோபம் எனக்குப் நன்றாக புரிகிறது. ஏனென்றால் எனக்கும் அந்த கோபம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nellai Iruttukadai Halwa shop
mayank yadav brother
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly
Edappadi Palaniswami
PMK Leader Anbumani ramadoss Press meet