இது உலகிற்கு கிடைத்த மிகப் பெரிய சொத்தாக கருதுகிறேன் – ஐ.நா.பொது செயலாளர்
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன், உலகிற்கே கிடைத்த மிகப்பெரிய சொத்தாக நான் கருதுகிறேன்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்ட், பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த தடுப்பூசி ஆனது கடந்த 16ஆம் தேதி முதல் மூன்று கோடி முன் களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் சார்க் நாடுகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் வழங்கி வருகிற நிலையில், வர்த்தக ரீதியாக சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் மொராக்கோ போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசுகையில், இந்தியாவின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன், உலகிற்கே கிடைத்த மிகப்பெரிய சொத்தாக நான் கருதுகிறேன். இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உலக நாடுகள் புரிந்து கொண்டிருக்கும் என நம்புவதாக குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரத்தை உறுதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இந்தியாவில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.