கொரோனா தொற்றை மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கட்டுப்படுத்தாது.! உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி விளக்கம்.!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் நோய் தொற்றை கட்டுப்படுத்த உதவாது என்று உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது .கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு மருந்துகளை கண்டுபிடிக்க பல டாக்டர்களும், ஆய்வாளர்களும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். சமீபத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உதவும் என்று கூறப்பட்டது. தற்போது அந்த மருந்து கொரோனா இறப்புகளை தடுக்காது என்று உலக சுகாதார அமைப்பின் உயர் விஞ்ஞானி கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நடந்த பேட்டி ஒன்றில் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பங்கு வகிக்கிறதா என்பதை கண்டறிவதற்கான WHO பல சோதனைகளை நடத்தி வருவதாக கூறியுள்ளார். அந்த வகையில் இந்த வாரம் ஐ. நா. சுகாதார நிறுவனம் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்காக பல பரிசோதனைகளை செய்ததன் முடிவுகளை தொடர்ந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா தொற்றை தடுப்பதற்கு உதவாது என்று கூறி தடை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் உலக சுகாதார அமைப்பால் பரிசோதிக்கப்பட்ட பிற மருந்துகளான எபோலோ மற்றும் எயிட்ஸ் நோய்க்கு பயன்படுத்தப்பட்ட சிகிச்சைகளை இன்னமும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.