ஆமணக்கு இட்லி பற்றி அறிவீர்களா? மல்லிகை பூ போன்ற மிருதுவான ஆமணக்கு இட்லியை செய்வது எப்படி?
மனித உடல் சீராக பிரச்சனையின்றி இயங்க உதவுவதில் முக்கிய இடம் பிடித்திருப்பது உணவு ஆகும். இந்த உணவின் முக்கியத்துவம் நன்கு புரிந்திருந்தாலும், பசிக்காக உணவை அருந்துபவர்களை விட, ருசிக்காக உணவு உண்பவர்களே நம்மில் அதிகம்.
அப்படி ருசியை விரும்பும் உணவு பிரியர்களின் மனதை கவரும் ருசியான ஆமணக்கு இட்லி எனும் கொங்குநாட்டு ஸ்பெஷல் உணவு பற்றி இந்த பதிப்பில் படித்து அறிய போகிறோம்.
ஆமணக்கு இட்லி
கொங்கு நாட்டு பகுதியில் பழங்காலத்தில் இருந்தே, இட்லி சமைக்க ஆமணக்கு விதைகளை பயன்படுத்தி வந்துள்ளனர்; இந்த ஆமணக்கு விதைகளை இட்லிக்கான மூலப்பொருட்களுடன் சேர்ந்து தயாரிக்கையி, சுவையான, மிருதுவான இட்லி நமக்கு கிடைக்கிறது.
முக்கிய பின் குறிப்பு
ஆமணக்கு விதைகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதுண்டு; ஆகையால் அத்தகைய நபர்கள் இந்த ரெசிபியை முயற்சிக்க வேண்டாம்.
மேலும் ஆமணக்கு விதைகளை அப்படியே பச்சையாக உண்டால், அது விஷத்தன்மையை ஏற்படுத்தி உடலின் இயக்கத்தை கெடுத்துவிடும். ஆகையால் சமைக்காத ஆமணக்கு விதைகள் உண்பதை தவிர்க்கவும்.
ஆமணக்கு இட்லி – தேவையான பொருட்கள்
ஆமணக்கு விதைகள், இட்லி அரிசி அல்லது சேலம் அரிசி, உளுந்தம் பருப்பு, ஜவ்வரிசி அல்லது அவல், தண்ணீர், உப்பு
தயாரிக்கும் முறை
உளுந்து மற்றும் இட்லி அரிசியை தனித்தனியாக நன்கு கழுவி, 3-4 மணி நேரங்கள் ஊற வைத்து விடுங்கள்; இவை இரண்டும் நன்கு ஊறிய பின்னர், நீரை வடித்து தானியங்களை தனியாக வைத்துக் கொள்ளவும்
ஊற வைத்த உளுந்தம் பருப்பை 30 நிமிடங்களுக்கு நன்கு அரைத்துக் கொள்ளவும்; மாவு நன்கு பதமாக 1 கப் தண்ணீரை, உளுந்தம் பருப்பை அரைக்கையில் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளவும்
இவ்வாறு அரைத்த மாவை தனியாக வைத்து கொள்ளவும்; பின் ஆமணக்கு விதைகளை எடுத்து அவற்றின் தோல் நீக்கி வெள்ளை பகுதி பருப்புகளை எடுத்து வைத்துக் கொள்ளவும்; 6-7 ஆமணக்கு விதைகளை மட்டும் பயன்படுத்தவும், இவ்விதைகளின் அளவு அதிகமானால் இட்லி கசப்பான சுவையை தரும்
இவ்வாறு எடுத்து வைத்த ஆமணக்கு விதைகளை ஜவ்வரிசி அல்லது அவலுடன் சேர்த்து மிக்சியில் நன்கு நைசாக பொடித்துக் கொள்ளவும்
அடுத்து ஊற வைத்த இட்லி அரிசி மற்றும் அரைத்த ஜவ்வரிசி – ஆமணக்கு விதை கலவையை சேர்த்து நன்கு அரைக்கவும்; இந்த மாவு அரைக்கையில் 1-1.5 கப் தண்ணீரை அவ்வப்போது பயன்படுத்தவும்
பின் அரைத்த உளுந்து மற்றும் அரிசி மாவுகளை ஒன்றாக கலந்து, உப்பு சேர்த்து 8-12 மணிநேரங்களுக்கு மாவை புளிக்க வைக்கவும்
புளித்த மாவை கொண்டு இட்லிகளை வார்த்து, சட்னி மற்றும் சாம்பார் வகையறாக்களுடன் பரிமாறவும்; சுவையான ஆமணக்கு இட்லி ரெடி!