பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையான வெங்காய மசாலா செய்வது எப்படி..!
பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையான வெங்காய மசாலா செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம்–4, பச்சை மிளகாய்–3, தக்காளி–1, மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன், தனி மிளகாய் தூள்-1 ஸ்பூன், எண்ணெய்-3 ஸ்பூன், பூண்டு–4 பல்(நறுக்கியது), இஞ்சி சிறிய துண்டு–1(நறுக்கியது), கடுகு–1/2 ஸ்பூன், சோம்பு–1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு–1/2 ஸ்பூன், உப்பு–1 ஸ்பூன், பொட்டுக்கடலை மாவு–1 ஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை–ஒரு கொத்து.
செய்முறை: பூரிக்கு தொட்டுக்கொள்ள செய்வதற்கு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கி கொள்ளுங்கள். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கடுகு, சோம்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனது பச்சை வாசனை போன பிறகு இதில் தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
நன்றாக வதங்கியவுடன் இதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். இதனை நன்கு கிளறி 2 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். 5-10 நிமிடம் இதனை கொதிக்க வைக்க வேண்டும். பொட்டுக்கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து இதனுடன் சேர்க்க வேண்டும். பொட்டுக்கடலை மாவு சேர்த்த பின்னர் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறுதியாக கொத்தமல்லி தழையை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். சுவையான வெங்காய மசாலா ரெடி.