சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு செய்வது எப்படி?
சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
சிக்கன் என்றாலே அனைவரும் விருப்பமாக சாப்பிடுவர். ஆனால், ஒரே முறையில் எப்போதும் எதை செய்தாலும் சிறிது நாட்களிலேயே அதன் விருப்பம் குறைய தொடங்கும். அதனால் சிக்கன் குழம்பை மிக சுவையான முறையில் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணவுள்ளோம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் – கால் கப், சிக்கன்-1 கிலோ, சின்ன வெங்காயம்-30 (பொடியாக நறுக்கியது), தக்காளி-4(பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய்-2 (நீளமாக கீறியது), இஞ்சி பூண்டு விழுது-2 டேபிள் ஸ்பூன், உருளைக்கிழங்கு-1 (நறுக்கியது), உப்பு தேவைக்கேற்ப, கறிவேப்பிலை தேவையான அளவு.
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:
சோம்பு-2 டீஸ்பூன், சீரகம்-1 டீஸ்பூன், பிரியாணி இலை-1, ஏலக்காய்-5, கிராம்பு-5, பட்டை-1 துண்டு.
வறுத்து அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:
வரமிளகாய்-10-12, மல்லி விதைகள்-4 டேபிள் ஸ்பூன், சீரகம்-2 டீஸ்பூன், மிளகு-2 டீஸ்பூன், கறிவேப்பிலை 1 கையளவு. அரைப்பதற்கு துருவிய தேங்காய்-1 கப், பொட்டுக்கடலை-1 டேபிள் ஸ்பூன், சோம்பு-1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாயை வைத்து, அதில் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை சேருங்கள். பின்னர் இதனை பொன்னிறம் வந்ததும் இறக்கி ஆறவைத்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். அரைத்த விழுதை தனியாக எடுத்து வைத்து விட்டு மேலும் அரைக்க வேண்டிய தேங்காய், பொட்டுக்கடலை, சோம்பு சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் குழம்பு செய்ய தேவையான கடாயை வைத்து தாளிப்பதற்கு தேவையான பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். இதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். இதனையடுத்து கறிவேப்பிலை மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்குங்கள். இதன் பிறகு இதில் நன்கு கழுவிய சிக்கனை சேர்த்து 5 லிருந்து 6 நிமிடம் வதக்குங்கள்.
பின்னர் குக்கரில் இது அனைத்துடன், அரைத்து வைத்த மசாலா பொருட்களை சேர்த்து, அதனுடன் நீர் சேர்த்து குக்கரை மூடி வைக்க வேண்டும். 2 விசில் வந்தவுடன் அதன் ஆவிகள் வெளியேறிய பின் குக்கரை திறந்து மீண்டும் பாத்திரத்திற்கு மாற்றி அதில் அரைத்த தேங்காய் விழுதுடன் உருளைக்கிழங்குகளை சேர்த்து 10 லிருந்து 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்குங்கள். சுவையான சிக்கன் குழம்பு தயார்.