சுவையான வாழைப்பூ வடை செய்வது எப்படி?
இன்று சுவையான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே வாழை மரத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருகிறது. வாழை மரத்தின் இலை, பூ, கனி, தண்டு என்று அனைத்தும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழைப்பூ வைத்து அருமையாக வடை செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – 1, கடலை பருப்பு – 3/4 கப், உளுத்தம் பருப்பு – 2 மேஜைக்கரண்டி, அரிசி – 2 மேஜைக்கரண்டி, வெங்காயம் – 1/4 கப், பெருங்காயம் – 1/8 டீஸ்பூன், ஜீரகம் – 1 டீஸ்பூன், சிகப்பு மிளகாய் – 4, கருவேப்பிலை, கொத்தமல்லி நறுக்கியது – 3 மேஜைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
முதலில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர் தண்ணீரை வடித்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து மிளகாய், ஜீரகம், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்து கொள்ளுங்கள். பிறகு, ஊறவைத்த பருப்பை தண்ணீர் சேர்க்காமலும், சேர்த்தும் என இரண்டு விதமாக அரைத்து வைத்து கொள்ளுங்கள். மசாலா வடைக்கு அரைப்பதை விட சற்று நைசாக அரைத்து கொள்ளலாம். இதன் பின்னர் வாழைப்பூவை சுத்தம் செய்து அரிந்து, அதனை தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள பருப்பு, வாழைப்பூ, நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் பிசைந்த மாவை வடைபோல் அதில் போட வேண்டும். மிதமான தீயில் வடையை பொரித்து கொள்ளுங்கள். சூடான, மொறுமொறுப்பான சுவையான வாழைப்பூ வடை தயார்.