ஹோண்டுராஸ் நாட்டின் அதிபர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி!
ஹோண்டுராஸ் நாட்டின் அதிபரான ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சீனா, வுஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் உலகளவில் 84 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ், பொதுமக்கள் மட்டுமின்றி, பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களையும் தாக்குகிறது. குறிப்பாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து, தனது பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டின் அதிபரான ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கு கொரோனா தொற்று உடுத்திசெய்யப்பட்டது. இதனால் அவர் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 51 வயதாகும் அவருக்கு நுரையீரலில் பிரச்சனை இருப்பதாகவும், அதற்காக நிமோனியா சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். தற்போது அவரது நிலைமை சீராக உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.