கோவில்பட்டியில் தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடக்கியுள்ளது…!!
தமிழக அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் மண்டல அளவில் ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆதன் ஒரு பகுதியாக தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் வரும் 18ந்தேதி வரை கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி,நெல்லை,கன்னியாகுமாரி, விருதுநகர், சிவகங்கை மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி – விருதுநகர் மாவட்ட ஹாக்கி அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில் இரு அணிகளும் தலா 3 கோல்களை அடித்ததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. 2வது ஆட்டத்தில் திருநெல்வேலி – சிவகங்கை மாவட்ட அணிகள் மோதின. போட்டி தொடங்கியது முதலே திருநெல்வேலி மாவட்ட அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திருநெல்வேலி ஹாக்கி வீரர்கள் தொடர்ந்து கோல்கள் அடித்தனர். போட்டியின் இறுதி முடிவில் 21 -0 என்ற கோல்கணக்கில் திருநெல்வேலி அணி இமாலைய வெற்றி பெற்றது. போட்டியின் இறுதியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும்.