வரலாற்றில் இன்று(15.01.2020)… எல்லைச் சாமிகளுக்கான இந்திய ராணுவ தினம் இன்று..
- பல்வேறு பணிகளில் ஈடுபடும் இந்திய இராணுவத்தின் சேவையை இந்தியர்கள் எவராலும் மறக்கமுடியாது.
- அத்தகைய எல்லை காவலர்களின் நினைவை போற்றும் நாள் இன்று.
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ்இந்தியாவின் ராணுவ தலைமை பொறுப்பு ஆங்கிலேயர் வசம் தான் இருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்த பின் 1949ம் ஆண்டு ஜனவரி 15ல் இப்பொறுப்பை அப்போதைய தலைமை ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் ‘கரியப்பா’ ஏற்றார்.
இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கவும் நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு வருடமும் இந்நாளில் ராணுவ தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தன்னலம் பார்க்காமல் நாட்டையும்,நம் நாட்டு மக்களையும் பாதுகாக்க எல்லையில் எந்நேரமும் விழிப்புடன் பணியாற்றும் நம் ராணுவ வீரர்கள் தான் தேசத்தின் உண்மையான கதாநாயகர்கள்.இங்கு நாம் நிம்மதியாக வாழ, அங்கு அவர்கள் குடும்பத்தை பிரிந்து தனிமையான சூழல் மற்றும் தங்கள் உயிரையும் தியாகம் செய்கின்றனர்.
எனவே அவர்களுக்கு நாம் என்றும் நன்றிக்கடன்பட்டவர்கள். எல்லையில் மட்டுமல்லாமல் இயற்கை சீற்றம், தேசிய பேரிடர், உள்நாட்டு கலவரம் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது மீட்பு மற்றும் அமைதி பணிகளிலும் இந்திய ராணுவம் ஈடுபடுகிறது. ராணுவ வீரர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஒட்டுமொத்தமாக இராணுவ பலத்தில் உலகில் நான்காவது பெரிய ராணுவமாக இந்திய இராணுவம் திகழ்கிறது.இந்த இந்திய இராணுவ முப்படைகளின் தலைவர் ஜனாதிபதி. தற்போது சமீபத்தில் முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது. இந்த பதவியில் தற்போது பிபின் ராவத் உள்ளார்.
ராணுவத்துக்கான கட்டளையை பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு மற்றும் ராணுவ அமைச்சகம் வெளியிடுகிறது. இந்திய ராணுவத்தில் தரைப்படை, கப்பல்படை, விமானப்படை, கடலோர காவல்படை, துணை ராணுவப்படை என ஐந்து படைப்பிரிவுகள் உள்ளன. இந்திய ராணுவத்தில் 14 லட்சத்துக்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்திய ராணுவம் அண்டை நாடுகளான பாகிஸ்தானுடன் நான்கு முறையும், சீனாவுடன் ஒருமுறையும் நேரடியாக போரில் ஈடுபட்டுள்ளது.இது தவிர ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் பங்கேற்று பல்வேறு நாடுகளில் அமைதி பணிகளில் ஈடுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளில் இந்த உண்மையான கதாநாயகர்களை நினைவு கூறுவோம்.