இந்திய சுதந்திர போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் அரசியல் குரு என்று அனைவராலும் போற்றப்படுபவருமான கோபாலகிருஷ்ண கோகலே (Gopal Krishna Gokale) பிறந்த தினம் வரலாற்றில் இன்று (மே 9). அவரைப் பற்றிய சிறந்த நம்மை அறியா தகவல்கள்;
- கோகலே மகாராஷ்டிர மாநிலம் கோதாலுக் என்ற இடத்தில் (1866) பிறந்தார்.
- இவரது இளம் வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், இவரின் அண்ணன் வேலை பார்த்து இவரைப் படிக்கவைத்தார். மின்சாரம் இல்லாததால் தெரு விளக்கில் படித்தார்.
- ஒரே கால் சட்டை , ஒரு மேல் சட்டை, ஒருவேளை சாப்பாடு, அதையும் இவரேதான் சமைக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் மும்பை எல்பின்ஸ்டோன் கல்லூரியில் 1884-ல் பட்டப் படிப்பை முடித்தார்.
- அரசு வேலைவாய்ப்புகள் வந்தன. ஆனால் அதில் விருப்பமின்றி, சமூக மறுமலர்ச்சியாளர் மகாதேவ் கோவிந்த ரானடேவின் தீவிர ஆதரவாளராக மாறினார்.
- பின் இவர் இந்திய தேசிய காங்கிரஸில் 1889-ல் இணைந்தார்.
- திலகர் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணிபுரிந்தார். ஆனால், இவர் மிதவாதப் போக்கை கடைபிடித்தார்.
- வன்முறையைத் தவிர்ப்பது, அரசு நிறுவனங்களில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவது ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்.
- பின் இவர், பம்பாய் சட்டப் பேரவைக்கு 1899-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியர்களுக்குப் பொதுத்துறை விஷயங்களில் அதிக அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றுத்தர போராடினார்.
- ஆங்கிலேய அரசின் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தை ஆதரித்தார். கோகலே மற்றும் மறுமலர்ச்சியாளர்களின் ஆதரவுடன் அந்த மசோதா சட்டமாக்கப்பட்டது.
- இது உட்பட பல விஷயங்களில் இவருக்கும் திலகருக்கும் கருத்துவேறுபாடுகள் எழுந்தன.
- கோகலே 1905-ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். இந்திய சேவகர்கள் சங்கம் (Servants of India Society) என்ற அமைப்பை உருவாக்கினார்.
- இந்த அமைப்பு, நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்து பள்ளிக்கூடங்களை நிறுவியது. தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.
- மகாத்மா காந்தி வளர்ந்துவந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு அறிவுரையாளராகத் திகழ்ந்தார். முகமது அலி ஜின்னாவுக்கும் இவரே வழிகாட்டியாக விளங்கினார்.
- காந்திஜியின் அழைப்பின் பேரில் 1912-ல் தென்ஆப்பிரிக்கா சென்றார். அப்போது நாட்டு நடப்பு, சாமானிய மக்களின் பிரச்சினைகள் பற்றி காந்தியிடம் எடுத்துரைத்தார்.
- ‘கோகலே என் அரசியல் குரு’ என தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் காந்தி. ‘அவர் ஸ்படிகம் போன்று தூய்மையானவர், ஆட்டுக்குட்டிபோல மென்மையானவர், சிங்கம் போல வீரம் படைத்தவர், பெருந்தன்மை உடையவர், அரசியல் அரங்குக்கு பொருத்தமானவர்’ என்றும் பாராட்டியுள்ளார் காந்தி.
- அரசியலை ஆன்மிகமாக்கல், சமூக மேம்பாடு, அனைத்தையும் உள்ளடக்கிய கல்வி ஆகியவற்றின் மீது கோகலே கொண்டிருந்த திடமான நம்பிக்கை காந்திஜியை வெகுவாக கவர்ந்தது.
- தன் வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்து மக்கள் பணியாற்றி முக்கியமாக மறுமலர்ச்சி கொள்கையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுத்தி வந்த கோபால கிருஷ்ண கோகலே தனது 49 ஆவது வயதில் (1915) இவ்வுலகை விட்டு மறைந்தார்.