வரலாற்றில் இன்று(04.04.2020)… தமிழறிஞர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் பிறந்த தினம் இன்று…

Default Image

தமிழறிஞர் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்கள்  கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் என்பவருக்கும் மாடத்தி அம்மாள் தம்பதிகளுக்கு  1855-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் நாள் பிறந்தார். இவர், இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் சிறப்புடன் கற்றார். இவருக்கு  தமிழாசிரியராக இருந்து கற்பித்தவர்  நாகப்பட்டினம் நாராயணசாமி ஆவர். இந்த நாகப்பட்டினம் நாராயணசாமி அவர்களிடம் தான்  மறைமலை அடிகளார் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இவர்  1876-ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பின், 1877-ஆம் ஆண்டில்  தனது ஆசிரியப் பணியை தொடங்கினார். பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராக பணியில்  சேர்ந்தார். 1880-ல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வி துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885-ல் டாக்டர் ஹார்வி துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரம் பிள்ளையைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்பட வகித்தார். இவர், ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணியம் என்ற அற்புதம் இவரால் 1891-ம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. இதன் காரணமாக இவருக்கு மனோன்மணீயம் சுந்தரம் என அழைக்கப்படுகிறார். பின், இவர் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894-ம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.
மனோன்மணியத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970-ல் அறிவிக்கப்பட்டது. இப்படி தமிழுக்கு தொண்டு செய்த பேராசிரியர் சுந்தரம் அவர்கள் தனது 42-வது வயதில் 1897 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 நாள் அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்.தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை என்பதற்கு இனங்க இன்றும் தமிழர்கள் மனதில் நீங்கா வாழ்வு வாழ்ந்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்