வரலாற்றில் இன்று(14.02.2020)…அல் உம்மா அமைப்பு நிகழ்த்திய கொடூர கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்த தினம் இன்று…
வரலாற்றில் இன்று கோயமுத்தூர் மாநகரை மட்டுமின்றி இந்தியாவையே புரட்டிப் போட்ட குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்த நாள் இன்று, இதன் காரணம், 1997 ஆண்டு நவம்பர் 29, இந்த நாளில்தான் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அல் உம்மாவினர்தான் இந்த காரணம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து கோவையில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதில், 17 முஸ்லீம்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். அல் உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா தாக்கப்பட்டார். இதற்குப் பழிக்கு பழிவாங்கும் வகையில், 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோவை நகரை உலுக்கும் வகையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. மொத்தம் 19 குண்டுவெடிப்புகள் நடந்தன. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே திரும்பி பார்க்க செய்த கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அல் உம்மா, அகில இந்திய அல் ஜிகாத் கமிட்டி ஆகியவற்றுக்குத் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. கோவை நகரின் 24 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கோவை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சம்பவத்துக்குப் பிறகு மிக வேகமாக விசாரணை நடந்தது. 181 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். 177 பேரை பல மாவட்ட, மாநிலங்களில் இருந்து கைது செய்தனர். 4 பேர் தலைமறைவானார்கள். 7 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அளவுக்கு விசாரணை வேகமாக நடைபெற்றது. இத்தகைய கொடூர தாக்குதல் தமிழகத்தில் நிகழ்ந்த தினம் வரலாற்றில் இன்று.