பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்டபின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குமரகுருவிற்கு முன்ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்..!

கடந்த மாதம் 19-ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மந்தவெளி பகுதியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு, முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசி இருந்தார். இவரது பேச்சுக்கு திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதைக் கண்டித்து, திமுக சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு, அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, மாவட்ட செயலாளர் குமரகுரு அவர்கள், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முறையாக அனுமதி பெற்று, மீண்டும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, அக்கூட்டத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு அவர்கள், கள்ளக்குறிச்சி மந்தவெளியில் நேற்று பொதுக்கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து நான் அவதூறாக பேசியதற்கு சமூக வலைத்தளம் வாயிலாக மன்னிப்பு கோரியிருந்தேன். நான் பேசிய பேச்சு புண்படும்படி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக பகிரங்கமாக மன்னிப்பு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதற்காக பொது கூட்டம் நடத்தி மன்னிப்பு கேட்ட, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குமரகுருவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியுள்ளது.