ஹீரோவாக நடிக்கவே மாட்டேன் என கூறிய ரஜினி! சூப்பர் ஸ்டாராக உச்சம் தொட்ட கதை!
ரஜினிகாந்த் பெயரிலேயே காந்தம் வைத்துள்ள இந்த நபரை தெரியாத சினிமா ரசிகர்கள் இந்தியாவில் எவரும் இல்லை என கூறலாம். அந்த அளவுக்கு பிரபலமானவர் ரஜினிகாந்த். இவருடைய இயற்பெயர் சிவாஜிராவ். சினிமாவில் முதன் முதலாக இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க தொடங்கினார். ஏற்கனவே தமிழ்சினிமாவின் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் இருப்பதால், இவரது பெயரை ரஜினிகாந்த் என மாற்றினார். பெயரிலேயே காந்தம் இருப்பதாலோ என்னவோ ஆறிலிருந்து அறுபது வயது வரை பலதரப்பட்ட ரசிகர்களை வைத்துள்ளார் ரஜினிகாந்த். 45 ஆண்டுகால தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக தற்போதும் கொடிகட்டி பறந்து வருகிறார்.
சினிமாவில் நடிக்க தொடங்கியது வில்லனாக மட்டுமே. அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், ஆடுபுலி ஆட்டம் என தொடர்ந்து வில்லத்தனமான கதாபாத்திரங்கள். அதன் பிறகு கதாநாயகனாக பைரவி. இந்த கதையை எழுதிவிட்டு கதாசிரியர் கலைஞானம் ரஜினி தான் ஹீரோ என முடிவு செய்து அவரிடம் கூற, அவரோ நான் வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறேன். ஹீரோவாக என்னை மக்கள் ஏற்க மாட்டார்கள் என ரஜினி மறுத்துவிட்டார். அதன்பிறகு ரஜினி இந்த வாய்ப்பை தவிர்க்க, தான் அப்போது வாங்கிய சம்பளத்தை விட அதிகமான சம்பளத்தை கலைஞானத்திடம் கூறியுள்ளார். இருந்தாலும் கலைஞானம் ரஜினி கூறிய சம்பளத்தை ஒரே தவணையில் கொடுத்து, தமிழ் சினிமாவில் ஹீரோவாக ரஜினிகாந்தை களமிறக்கினார். அப்படத்தை பிரபலப்படுத்த விநியோகிஸ்தர் கலைபுலி எஸ் தாணு கையில் எடுத்த ஆயுதம் சூப்பர் ஸ்டார் பட்டம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பைரவி என திரையிட்ட இடங்களிலெல்லாம் போஸ்டர் ஒட்ட தொடங்கினார் கலைபுலி எஸ் தாணு. இதை கேள்விப்பட்ட ரஜினி பதறிப்போனார். அதனை தடுக்க நினைத்தார். ஆனால், அதற்குள் சூப்பர் ஸ்டார் பட்டம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பரவி விட்டது.
அடுத்ததாக ஹீரோ, வில்லத்தனமான ஹீ,ரோ, ஸ்டைலான ஹீரோ என இதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஹீரோவாக உருவெடுத்தார் ரஜினிகாந்த். காளி, முள்ளும் மலரும், ஜானி, முரட்டுக்காளை என கிளாஸ் ஹீரோ, ஸ்டைலான ஹீரோ, கிராமத்து ஹீரோ என தனது கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக உச்சம் தொட்டு விட்டார்.
பல கமர்சியல் படங்களில் நடித்து மாபெரும் வசூல் சாதனை செய்து வந்தாலும், ஸ்டைலாக மட்டுமே நடித்து வருகிறார் காளி, முள்ளும் மலரும், ஜானி, என க்ளாஸ் படங்களில் நடிக்க வில்லை என்கிற ஏக்கத்தை, மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றிய தளபதி தீர்த்துவைத்தது. அவரது நடிப்பிற்கு மேலும் ஒரு மணி மகுடமாக அமைந்தது அப்படம். அதன் பிறகு மீண்டும் தனது கமர்சியல் ஸ்டைல் நடிப்பை கையில் எடுத்தார். அண்ணாமலை, பாட்ஷா என சுரேஷ் கிருஷ்ணா உடன் சொல்லி அடித்தார். அதன் பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, படையப்பா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை மிரண்டு போகும் அளவிற்கு தனது படங்களை கொடுத்தார்.
அதன்பிறகு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சிவாஜி, எந்திரன், 2.O என தற்காலத்து குழந்தைகள் வரை தனது ரசிகர் வட்டாரத்தை பரப்பியுள்ளார் சூப்பர் ஸ்டார். என்றும் இளமையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தினச்சுவடு சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள். பேட்ட படத்தில் மாஸ் காட்டியது போல அடுத்து வரப்போகும் தர்பார் படத்திற்காகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.