FIFA World Cup 2018:முதல் பாதியில் ரஷ்ய அணி அபார கோல்!சவுதி அரேபியா அணி திணறல்
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.
இன்று உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் தொடங்கியது. இரண்டு கண்டங்களில் முதல்முறையாக நடைபெறும் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
நடப்பு ஆண்டில் ரஷ்யா முதன்முறையாக ஏற்று நடத்துகிறது. இந்த போட்டித் தொடரை நடத்த இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும்
ரஷ்யாவில் மாஸ்கோ, சோச்சி, பீட்டர்ஸ்பர்க், கஸான் உள்ளிட்ட 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் மொத்தம் 64 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் எகடெரின் பர்க் – கலினிங்கிராட் நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் 2424 கிலோ மீட்டர். மாஸ்கோவுக்கும், லண்டனுக்கும் இடையே உள்ள தூரமும் இதே அளவுதான். மேலும் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் 6 மைதானங்கள் ஆசிய கண்டத்திலும், மீதமுள்ள 6 மைதானங்கள் ஐரோப்பிய கண்டத்திலும் உள்ளன. இப்படி இரு கண்டங்களிலும் நடைபெறும் முதல் உலக கோப்பை போட்டி இதுதான்.
போட்டிகள் நடைபெறும் ரஷ்ய உலகக் கோப்பைத் தொடர் நடைபெறவுள்ள 12 மைதானங்களில் 9 மைதானங்கள், புதிதாகக் கட்டப்பட்டவை. உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில், குறைந்தது 35 ஆயிரம் இருக்கைகள் இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
இன்றைய முதல் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மோதுகின்றன. உலகக் கோப்பை வரலாற்றிலேயே, உலகத் தரவரிசையில் மிகவும் குறைந்த நிலையில் இருக்கும் இரண்டு அணிகள் மோதுவது இதுவே முதல் முறையாகும். குறிப்பாக போட்டியை நடத்தும் ரஷ்யா, தரவரிசையில் 70வது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியா 67வது இடத்தில் உள்ளது. கடந்த 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் தற்போது ஆட்டத்தின் பாதி நேர முடிவில் ரஷ்ய அணி 2 கோல்கள் அடித்துள்ளது.எனவே 2-0 என்ற கணக்கில் சவுதி அரேபியா உடனான ஆட்டத்தில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.