ஊழியர்கள் மூலமாக ட்விட்டரில் நுழைந்த ஹேக்கர்கள்..!
சமூக வலைதளங்களில் அவ்வபோது ஹேக்கர்கள் ஹேக் செய்வது நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்க பிரபலங்களின் டிவிட்டரில் நுழைந்த ஹேக்கர்கள் மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட 130 கணக்குகளில் 45 கணக்குகள் எலோன் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் கணக்குகளில் இருந்து குறிப்பிட்ட பிட்காயின் அட்ரஸுக்கு உடனடியாகப் பணம் அனுப்பினால் அது இரட்டிப்பாகி உங்களுக்கு திரும்பிவரும் எனப் பதிவிடப்பட்டது. 45 ட்விட்டர் கணக்குகளில், பாஸ்வேர்ட் ரீசெட் செய்யப்பட்டு, லாக் இன் செய்து ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஹேக் செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு ட்விட்டர் இதுகுறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளது. அதில் சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களின் தொலைபேசி மற்றும் ஜி மெயில் மூலம் இந்த தாக்குதலை ஹேக்கர்கள் செய்ததாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. மேலும், ஹேக்கர்கள் எங்கள் உள் அமைப்புகளை அணுகவும், எங்கள் செயல்முறைகள் பற்றிய தகவல்களைப் பெறவும் தாக்குதல் பயன்படுத்தினர் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
இந்த உலகில் எந்த அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறதோ அதே அளவிற்கு ஆபத்தும் உள்ளது. பொதுவாக நம்முடைய தொலைபேசியில் நமக்கு தெரியாமல் சில ஆப் இருந்தால் அதை உடனடியாக நீக்க வேண்டும் இதன் மூலமும் ஹேக்கர்கள் நம்முடைய தகவல்களை திருடிவிடுவார்கள். மேலும், உங்களுகளை தொடர்பு கொண்டு வங்கி கணக்கின் தகவல்களை கேட்டால் உடனடியாக தகவலை கொடுக்காமல் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் கொடுக்கவேண்டும்.
மேலும், உங்கள் ஜி மெயிலில் உங்களுக்கு தெரியாதவர்கள் அனுப்பிய தகவலை திறந்து பார்க்காமல் அதை நீக்க வேண்டும். அப்படி அவர்கள் அனுப்பிய தகவலை திறந்து பார்க்கும்போது உங்களுடைய தகவல்களை ஹேக்கர்கள் திருடி விடுவார்கள்.