H1B விசா: அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு தடை விதித்த கலிபோர்னியா நீதிபதி!
அமெரிக்கா, வடக்கு கலிபோர்னியாவின் மாவட்ட நீதிபதியான ஜெப்ரி, எச்1 பி விசா குறித்த அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதித்தார்.
வெளிநாடுகளை சேர்ந்த மக்கள், அமெரிக்காவில் வேலை செய்வதற்காக “எச்1 பி” விசா அமெரிக்க அரசு வழங்கி வருகிறது. இந்த எச்1 பி விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். அதன் பிறகும் தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம்.
இந்த விசாவை மற்ற நாடுகளை விட அதிகளவில் இந்தியர்களும், சீனர்களும் தான் பெற்று வந்தனர். மேலும், டிரம்ப் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச்1 பி விசாவில் பல கட்டுப்பாடுகளை விதித்தார்.
உலகளவில் கொரோனா வைரஸ் பரவிவரும் சூழலில், அமெரிக்க மக்கள் பலர் வேலைவாய்ப்பை இழந்தனர். இதனையடுத்து அதிபர் டிரம்ப், வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எச்1 பி விசாக்களை இந்த ஆண்டு இறுதிவரை ரத்து செய்வதாக அறிவித்தார். இது, அங்கு பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை எதிர்த்து அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் மற்றும் சில நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்தநிலையில் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தின் மாவட்ட நீதிபதியான ஜெப்ரி, எச்1 பி விசா குறித்த அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதித்தார். மேலும், அதிபர் தனது அதிகாரத்தை மீறி விட்டதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.