கிரீன் வால்ட் அருங்காட்சியக கொள்ளை சம்பவம்.! ஜெர்மனி போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேர் .!
கடந்தாண்டு கிரீன் வால்ட் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக மூன்று பேரை ஜெர்மனி போலீசார் கைது செய்துள்ளனர்.
கிழக்கு ஜெர்மனியில் உள்ள கிரீன் வால்ட் அருங்காட்சியகத்தின் காட்சி பெட்டகங்களை உடைத்து கடந்தாண்டு 1 பில்லியன் யூரோக்கள் (1.2 பில்லியன் டாலர்) அதாவது இந்திய மதிப்பில் 100 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு போனது . அதில் வைரங்கள், வைடூரியங்களாலான 18-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிறுவப்பட்ட மூன்று நகைகளும் உள்ளடங்கும் .
திருடர்கள் திருடுவதற்கு முன்பு அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்ததாகவும், அதனையடுத்து அருங்காட்சியகத்தின் கம்பியிடப்பட்ட சன்னலை இருவர் உடைத்தது பாதுகாப்பு கேமராவில் பதிவாகி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து பேசிய அருங்காட்சியகத்தின் இயக்குனர் , திருட்டுப் போன பொருட்கள் அளவிட முடியாத கலாச்சார மதிப்பு கொண்டது என்று கூறினார் . அத்தகைய மதிப்புடைய பொருட்களை சந்தையில் விற்க இயலாது என்று கூறிய போது , அதனை உருக்கியோ , உடைத்தோ விற்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் .
அதற்கு சேக்சோனி மாநிலத்தில் உள்ள அருங்காட்சியகங்களின் இயக்குநரான மரியான் ஆக்கர்மேன் , திருடு போன நகைகளின் விலை மதிப்பை விட கலாச்சார மதிப்பே மிகவும் அதிகம் என்று பதிலளித்தார். மேலும் கொள்ளை நடைபெற்ற அருங்காட்சியகத்தில் இருந்த மிகவும் சிறந்த பொக்கிஷங்களில் ஒன்றான 41 காரட் டிரெஸ்டன் பச்சை வைரத்தை நியூயார்க்கின் மெட்ரோபோலிடன் கலை அருங்காட்சியகத்திற்கு கடனாக வழங்கப்பட்டிருந்தது .எனவே அது திருடு போகவில்லை.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஜெர்மன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . அதில் 18 சொத்துக்களை சோதனை செய்து மூன்று பேரை போலீசார் செவ்வாய் கிழமை கைது செய்துள்ளனர். முக்கியமாக நியூகோல்ன் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், கேரேஜ்கள் மற்றும் வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர் . இந்த சோதனையில் 1,600-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களில் இருந்தார்களா என்று தெரியவில்லை. மேலும் கைது செய்யப்பட்ட மூவரும் ஜெர்மன் குடிமக்கள் என்றும் , அவர்களிடமிருந்து திருடு போன நகைகள் மீட்கப்பட்டதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை