புயலை எதிர்கொள்ள அரசு தயார் – அமைச்சர் ராமச்சந்திரன்
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், ஒருசில நாட்களில் புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung) என பெயரிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேற்கு வட மேற்கு திசையில் 18 கிலோமீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது.
சென்னையில் இருந்து 510 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்தம் மண்டலம் நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை தென்மேற்கு வங்கக் கடலில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், டிச. 5ம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்…தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு.!
இந்த நிலையில், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் இடத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளை அங்கேயே தங்கி பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை பாதிப்பால் இதுவரை 420 குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேர் உயிரிழந்தனர். மழையால் உயிரிழந்த ஐந்து பேர் குடும்பங்களுக்கும் தலா நான்கு லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவாக உள்ள புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. மின்சார கம்பங்கள், வயர்கள் செல்லும் பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சென்னையில் மட்டும் 162 சமுதாய கூடங்கள் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.