அனுமன் உதவியது போல எங்களுக்கும் உதவி செய்யுங்கள் – பிரதமருக்கு பிரேசில் அதிபர் கடிதம்.!
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் இதுவறை 14,41,589 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83,065 ஆக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் 3,08,549 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது.
இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், மருத்துவ ஊழியர்கள் கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோகுளோரோகுயினை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து ஹைட்ரோகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குமாறு கடந்த வாரம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடை இருந்ததால் அமெரிக்காவிற்கு மருந்தை அனுப்பாமல் இருந்தது. இதனால் அதிபர் ட்ரம்ப் மருந்து அனுப்பினால் பாராட்டு, இல்லையென்றால் பின்விளைவு ஏற்படும் என மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கி பாராசிட்டமால், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து இராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, இந்தியப் பிரதமருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரைக் காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களைக் காக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.