டெல்டா வகை கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் – அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்!
டெல்டா வகை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அமெரிக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு விதமான கொரோனா வைரஸ் பரவிக்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதன்முதலாக பி1.617.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு டெல்டா என உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இங்கிலாந்தில் இந்த உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸால் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இங்கிலாந்து நாட்டின் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலும் இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக நாட்டு மக்கள் அனைவரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.