கங்குலி நெகிழ்ச்சிப் பகிர்வு !
என் முதல் டெஸ்ட் போட்டியில் உடைந்த என்னுடைய பேட்டை பிளாஸ்டர் போட்டு எனக்காக சச்சின் ஒட்டிக்கொடுத்தார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும், சவுரவ் கங்குலியும் இதுவரை ஏராளமான போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளனர்.
கிரிக்கெட்டில் தனது கிடைத்த அனுபவங்கள், எதிர்கொண்ட நிகழ்வுகள், சந்தித்த மனிதர்கள்குறித்து கங்குலி தனது சுயசரிதையான “ ஏ செஞ்சுரி இஸ் நாட் இனஃப்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் குறிப்பாக இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் தான் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டி குறித்து நெகிழ்ச்சியாக கங்குலி குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 1996-ம் ஆண்டு இந்திய அணிக்கு நான் தேர்வானேன். இங்கிலாந்து அணியுடன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டிதான் நான் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியாகும்.
என் அதிர்ஷ்டம், முதல்போட்டியிலேயே நான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தேன். ஏறக்குறைய 6 மணிநேரத்துக்கும் மேலாக நான் களத்தில் இருந்து விளையாடினேன். சதம் அடித்தபின், தேநீர் இடைவேளை வந்தது.
அப்போது, எல்லோரும் தேநீர் குடிக்கச் சென்றுவிட்டார்கள். என்னுடைய பேட்டின் கைப்பிடி உடையும் தறுவாயில் இருந்தது. இதனால், அதை சரிசெய்ய நான் பெவிலியனுக்குச் சென்றேன். 15 நிமிடங்களுக்குள் மீண்டும் களத்தில் வந்துவிட வேண்டும். குறுகிய இடைவேளை மட்டுமே இருந்தது.
அந்த நேரத்தில் நான் எனது பேட்டை டேப்மூலம் ஒட்டிக் கொண்டு இருந்தேன். இதைப் பார்த்த சச்சின் டெண்டுல்கர் என்னிடம் வந்து, நான் உனக்காக டேப்பால் பேட்டை ஒட்டுகிறேன். நீங்கள் தேநீர் அருந்துகள். நேரம் குறைவாக இருக்கிறது.
அடுத்து நீங்கள் போய் பேட் செய்ய வேண்டும். தேநீர் குடிக்காவிட்டால், களைப்படைந்துவிடுவீர்கள். இந்த வேலையை நான் செய்கிறேன் என்று என்னிடம் கூறினார்.
முதல் போட்டியில் மட்டுமே அறிமுகமான சச்சின் டெண்டுகரின் அன்பான பேச்சு என்னை நெகிழ்ச்சி அடையச் செய்துவிட்டது. இது இன்னும் மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருந்து வருகிறது என்று கங்குலி கூறினார்.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு