கோவிஷீல்டு செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு பிரான்ஸ் அரசு அனுமதி..!
இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு பிரான்ஸ் நாட்டிற்கு வருவதற்கு அந்நாடு அனுமதி அளித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அதேசமயம், சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலை வெளியிட்டது. இதில் ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி மட்டுமே இருந்தது.
இதனால் இந்தியா இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை அனுமதிக்க பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புக்கொண்டது.
தற்போது பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெளிநாடுகளிலிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு வருபவர்கள் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியால் உருவாக்கப்பட்ட இந்தியாவில் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர். மேலும், டெல்டா வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக எல்லைகளில் பரிசோதனை கடுமையாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
பிரிட்டன் மற்றும் ஸ்வீடன் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி அஸ்ட்ரா ஜெனேகா. இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் ஒன்றான சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.