நியூசிலாந்து வரலாற்றில் முதல்முறையாக இந்திய வம்சாவளி பெண் அமைச்சராக நியமனம்.!
இந்தியாவில் பிறந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் பள்ளி படிப்பிற்காக சிங்கப்பூர் சென்று தற்போது நியூசிலாந்து நாட்டின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பெண்ணை நியூசிலாந்தின் அமைச்சராக அறிவிப்பது இதுவே முதல் முறையாகும். நியூசிலாந்தின் பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன் ஐந்து புதிய அமைச்சர்களை நியமித்ததில் பிரியங்கா ராதாகிருஷ்ணனும் ஒருவர்.
திருமதி.ராதாகிருஷ்ணன் வீட்டு வன்முறையில் இருந்து தப்பிப்பிழைத்த பெண் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் – உள்ளிட்ட பெரும்பாலும் கேட்கப்படாத மக்களின் குரல்களுக்காக வாதாட தனது பணி வாழ்க்கையை செலவிட்ட இவர் 2017 இல் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2019இல் இன சமூகங்களுக்கான அமைச்சரின் நாடாளுமன்ற தனியார் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
இது தவிர, அவர் சமூக மற்றும் தன்னார்வத் துறை அமைச்சராகவும், சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சராகவும் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது இந்திய வம்சாவளி அமைச்சராக நியமனமாகியுள்ள இவர் மற்றும் மீதமுள்ள அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை பதவியேற்ற பின்னர் அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.