நைஜீரியாவில் குரங்கு அம்மை நோய்க்கு முதல் உயிரிழப்பு பதிவு..!
குரங்கு அம்மை நோய்க்கு நைஜீரியாவில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. இந்நிலையில் முதல்முறையாக குரங்கு அம்மை நோய்க்கு நைஜீரியாவில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நைஜீரியாவை சேர்ந்த 40 வயதான நபர் ஒருவர் குரங்கு அம்மை நோயால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு நோய் தடுப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து தெரிவித்துள்ள நைஜீரியா நோய் தடுப்பு மையம், உயிரிழந்த நபர் இணை நோய்கள் இருப்பவர் மற்றும் இவர் நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொண்டு வந்தார் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது நைஜீரியாவில் 21 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பதாக பதிவாகியுள்ளது. மே 26 வரை உள்ள நிலவரப்படி, கிட்டத்தட்ட 257 பேருக்கு 23 நாடுகளில் குரங்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.