நடுவானில் தீ.!சாதுரியமாக செயல்பட்ட விமானியால் 278 பயணிகள் தப்பினர்.!
- புகுயோகா நகரில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம் ஒரு மணி நேரத்திற்கு பின் நடுவானில் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது.
- விமானி சாதுரியமாக செயல்பட்டு மீண்டும் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார்.
ஜப்பானின் புகுயோகா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து “ஆல் நிப்பான் ஏர்வேஸ்” நிறுவனத்துக்கு சொந்தமான “போயிங் 767” ரக விமானம் ஓன்று தலைநகர் டோக்கியோவிற்கு புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தில் மொத்தமாக 278 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்திற்கு பின் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது.
இதனால் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகள் மத்தியில் பதற்றமும் , பீதியும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பயணிகள் பயத்தில் அலறினர்.பின்னர் மீண்டும் புகுயோகா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார். இது குறித்து விமானி விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சுகள் தயார் நிலையில் இருந்தனர்.தரையிறங்கிய விமானத்தின் அவசரகால வழிகள் வழியாக பயணிகள் பாதுகாப்பாகஇறங்கினர். பின்னர் விமானத்தின் என்ஜினில் எரிந்த தீ அணைக்கப்பட்டது. விமானி சாதுரியமாக செயல்பட்டதால் பயணிகள் காயங்கள் இன்றி உயிர் பிழைத்தனர்.