#Facebook:ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்களின் மீதான தடையை நீக்கிய பேஸ்புக் நிறுவனம்
ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்களின் செய்திகளை பயனர்கள் பார்க்கவோ படிக்கவோ முடியாதபடி பேஸ்புக் செய்தி நிறுவங்களின் பக்கங்களை முடக்கியது.இதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது ஆஸ்திரேலிய அரசு நிறைவேற்றிய புது சட்டமான ‘நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட்’.
இச்சட்டத்தின் படி செய்திகளுக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டும் என்கிற ஆஸ்திரேலியாவின் புதிய சட்டம் சர்ச்சை கிளப்பியது.இதனால் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தது.பேஸ்புக் நிறுவனம் ஒருபடி மேலே போய் ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்களின் முகநூல் பக்கங்களை முடக்கியது.இதனால் பயனர்கள் எந்தவித அறிவிப்புகள் ,தகவல்களை அறிந்துகொள்ள முடியாது நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தை திருத்துவதாக ஒப்புக்கொண்டதை அடுத்து பேஸ்புக் நிறுவனம் ஆஸ்திரேலிய ஊடகங்களின் மீது விதித்திருந்த தடையை செவ்வாய்க்கிழமை நீக்கியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியாவின் பேஸ்புக் நிர்வாக இயக்குனர் வில் ஈஸ்டன்” இந்த மாற்றங்களின் விளைவாக, பொது நலன் சார்ந்த பத்திரிகைக்கான எங்கள் முதலீட்டை மேலும் மேம்படுத்துவதற்கும், ஆஸ்திரேலியர்களுக்கு பேஸ்புக்கில் வரும் செய்திகளை எதிர்வரும் நாட்களில் மீட்டெடுப்பதற்கும் நாங்கள் இப்போது பணியாற்ற முடியும்” என்று கூறினார்.