தடுப்பூசி மூலப்பொருட்களுக்கான ஏற்றுமதி தடை.., முதலில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை.., வலுக்கும் எதிர்ப்பு..!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒன்றாக தற்போது கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சில தடுப்பு மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து மத்திய அரசு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
ஆனாலும் இந்தியாவில் ஏற்பட்டு உள்ள தடுப்பூசி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துயுள்ளது. ஆனால் தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்கள் இந்தியாவிடம் மிக குறைவாகவே உள்ளதால் இந்தியா மூலப்பொருள்களை அமெரிக்காவிடம் கேட்டு வருகிறது.
அதற்கு முன்னதாக மூலப்பொருள்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மூலப்பொருள்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி உதவுமாறு அமெரிக்காவிடம் இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில். கடந்த வாரம், கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனிடம் மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கான தடையை நீக்குமாறு கோரிக்கை வைத்தார்.
ஆனால், அமெரிக்கா இதுவரையிலும் இந்தியாவின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், அமெரிக்கா தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு. இந்த சூழலில் அமெரிக்காவுக்குத் தடுப்பூசியின் தேவையானது மிகவும் அதிகமாக உள்ளது. இதனால், உள்நாட்டு மருந்து நிறுவனங்களுக்கு மூலப்பொருள்கள் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த சமயத்தில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது என தெரிவித்தார். பைடன் அரசின் இந்த முடிவுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.