Eswatini (ஸ்வாஸிலாந்து) நாட்டின் பிரதமர் கொரோனாவால் உயிரிழப்பு.!
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட Eswatini (ஸ்வாஸிலாந்து) நாட்டின் பிரதமர் அம்ப்ரோஸ் மன்ட்வுலோ த்லமினி காலமானார்.
நான்கு வாரங்களுக்கு முன்பு பரிசோதனை செய்ததில் ஈஸ்வதினி நாட்டின் பிரதமர் அம்ப்ரோஸ் மன்ட்வுலோ த்லமினிக்கு (52 வயது) கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது இன்று பிற்பகல் காலமானார் என்று துணைப் பிரதமர் தெம்பா மசுகு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். த்லமினி, ஈஸ்வதினி நெட்பேங்க் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பது உட்பட 18 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கித் துறையில் பணியாற்றியவர்.
சுமார் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கும் தென்னாப்பிரிக்க நாடுகளில் இதுவரை 6,768 பேருக்கு தொற்று காரணமாக சுவாச கோளாறு நோய்கள் பதிவாகியுள்ளன. அதில், 127 பேர் இறந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. த்லமினி, கடந்த 2018-ல் ஈஸ்வதினி நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.