20 கோடி ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருட்டு.? வெளியான அதிர்ச்சி தகவல்.!
200 மில்லியனுக்கும் (20 கோடி) அதிகமான ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள்(Email Id) திருடப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் பயனர்களின் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்பொழுது, 200 மில்லியன் (20 கோடி) ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருடப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் ஆன்லைன் ஹேக்கிங் தலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக குறைந்தது 400 மில்லியன் (40 கோடி) மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் திருடப்பட்டதாகக் கூறப்பட்டது. தகவல்களை திருடிய ஹேக்கர்களின் அடையாளம் மற்றும் இருப்பிடம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இதுகுறித்து இஸ்ரேலிய இணைய பாதுகாப்பு கண்காணிப்பு நிறுவனமான ஹட்சன் ராக்கின் இணை நிறுவனர் அலோன் கால் “இத்தகைய சம்பவம் தொடர்ந்து நடைபெற்றால் அது பல்வேறுசட்ட விரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்” என்று கூறியுள்ளார். இதை குறித்து ட்விட்டர் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.