ட்விட்டரை கைப்பற்றிய எலான்- முடிவுக்கு வருகிறதா பராக் அகர்வாலின் CEO பொறுப்பு?..!
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று (நேற்று) கைப்பற்றியுள்ளார்.
முடிவுக்கு வரும் CEO பொறுப்பு:
இந்நிலையில்,ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பராக் அகர்வாலின் வாழ்க்கை உண்மையில் CEO பொறுப்பு தொடங்கிய சில நாட்களிலேயே முடிவுக்கு வருகிறது.ஏனெனில்,ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சிக்கு பதிலாக ஆறு மாதங்களுக்கு முன்பு,நவம்பர் 29, 2021 அன்றுதான் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார்.இதற்கு முன்னதாக அவர் நிறுவனத்தில் நீண்ட காலம் பொறியியலாளராக பணியாற்றியவர்,அதன்பின்னர்,தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவிக்கு உயர்ந்திருந்தார்.
ட்விட்டரை கைப்பற்றிய மஸ்க்:
இந்த நிலையில்,44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியுள்ளார்.இதன்காரணமாக,அகர்வாலின் எதிர்காலம் இப்போது நிச்சயமற்றதாகத் தெரிகிறது.ஏனெனில்,ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு,மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் பொறுப்புகளுக்கு தனக்கு விருப்பமானவர்களை கொண்டு வரக்கூடும் என்று கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் தாக்கம்:
இதனிடையே,பராக் அகர்வால் கூறுகையில்:”உலகம் முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தையும் பொருத்தத்தையும் ட்விட்டர் கொண்டுள்ளது.எங்கள் அணிகளைப் பற்றி ஆழ்ந்த பெருமிதம் கொள்கிறது”, என்று பதிவிட்டுள்ளார்.
Twitter has a purpose and relevance that impacts the entire world. Deeply proud of our teams and inspired by the work that has never been more important. https://t.co/5iNTtJoEHf
— Parag Agrawal (@paraga) April 25, 2022
பராக் அகர்வால் யார்?:
பராக் அகர்வால் வட இந்தியாவின் ராஜஸ்தானில் பிறந்த நிலையில்,பெரும்பாலும் மும்பையில் வளர்ந்தார்.அவர் புகழ்பெற்ற மும்பை IIT நிறுவனத்தில் கல்வி பயின்றார்.பின்னர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.அங்கு அவர் 2012 இல் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.அவர் பட்டதாரி மாணவராக இருந்தபோதே ட்விட்டரில் சேர்ந்தார்.
இதனையடுத்து,அவர் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்றபோது, நிறுவனம் அவரது ஆண்டு சம்பளத்தை 1 மில்லியன் டாலராக நிர்ணயித்தது.அவருக்கு 1.5 மில்லியன் டாலர் வரை போனஸ் கிடைக்கும். இன்றைய ட்விட்டர் விலை நிர்ணயத்தின் அடிப்படையில் மட்டும், அகர்வாலின் நிகர மதிப்பு குறைந்தபட்சம் 26 மில்லியன் டாலர் என்று Factset தொகுத்துள்ள ஒழுங்குமுறை ஆவணங்கள் கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.