#அறிவிப்பு# 30%மாக குறைந்தது பாடத்திட்டம்-அதிரடி
சி.பி.எஸ்.இ. பாட திட்டத்திம் 30 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இதுகுறித்து சி.பி.எஸ்.இ. அகாடமிக் இயக்குனர் ஜோசப் இம்மானுவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதார ரீதியான அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளால் பள்ளிகள் தற்போது மூடப்பட்டுள்ளன.
நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. எனவே நடப்பு கல்வி ஆண்டில் ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாட திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள கமிட்டியும் நிர்வாக கமிட்டி மற்றும் பாட திட்ட கமிட்டியும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நெருக்கடியான சூழலை கருத்தில் கொண்டு பாட திட்டத்தில் மாற்றங்கள் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மாணவர்களுக்கு தேவையான முக்கிய பாடங்கள் முதன்மையான அம்சங்கள் பாதிக்காத வகையில் இந்த மாற்றங்கள் இருக்கும். பள்ளி தலைமை நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பாட திட்ட குறைப்பு தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். குறைக்கப்படும் பாடத் திட்டம் பள்ளிகளின் அக மதிப்பீடு ஆண்டின் இறுதி பொது தேர்வு ஆகியவற்றில் இடம் பெறாது.
அதேபோல வகுப்புகள் நடத்தப்படும் நாட்களுக்கான அகாடமிக் காலண்டர் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் புதிதாக தயார் செய்யப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய அகாடமிக் காலண்டரை பின்பற்ற வேண்டும். குறைக்கப்பட்ட பாட திட்ட விபரங்கள் சி.பி.எஸ்.இ.யின் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாட திட்ட குறைப்பு குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டில் பாட திட்ட குறைப்பு தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன; 1500க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்தனர். கல்வியாளர்கள் பலரும் கருத்துகளை பதிவு செய்தனர்.
அதன்படி நடப்பு கல்வி ஆண்டின் சூழலை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையில் மாணவர்களுக்கு தேவையான முக்கிய அம்சங்கள் அடிப்படை பாடங்கள் குறைக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும்.இவ்வாறு கூறியுள்ளார்