ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்… இதுவரை 48 உயிரிழப்பு!
ஜப்பானின் மேற்கு பகுதியில் நேற்று ஒரு நாளில் மட்டும் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அந்நாட்டை உலுக்கியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் மத்திய ஜப்பானை கடுமையாக தாக்கியுள்ளது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வீடுகள், கட்டடங்கள் குலுங்கி தரைமட்டமாகும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இதில் குறிப்பாக, நேற்று ஜப்பானின் மேற்கு பகுதியில் அதிகபட்சமாக 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கடலோர பகுதி நகரங்களில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. அதன்படி, கடலோர பகுதிகளில் சுனாமி அலைகளும் தாக்கியது. ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி அலை காரணமாக பெரும் சேதங்கள், ஏராளமான உயிரிழப்புகள் இருக்கக்கூடும் என அஞ்சப்பட்டது.
நேற்று ஒரே நாளில் 155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பல படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜப்பானிய மீட்புப் படையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே, ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் எனவும் அந்நாட்டு நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை பல சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் ஜப்பானில் உணரப்பட்டது. இதில் ஒன்று 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என கூறப்படுகிறது.
அதாவது, ஜப்பானின் இஷிகாவாவில் மீண்டும் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, நேற்று இஷிகாவா மாகாணத்தில் தான் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால், தீ விபத்து, வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன, மீன்பிடி படகுகள் மூழ்கின மற்றும் நெடுஞ்சாலைகள் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டன. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால், தங்களை வீடுகளை விட்டு ஜப்பானிய மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த சூழல் ஜப்பானின் இஷிகாவாவில் இன்று மீண்டும் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.