#Breaking:காபூலில் இரட்டை குண்டு வெடிப்புகள்:19 பேர் பலி,50 பேர் படுகாயம் – தகவல்..!
காபூலில் இரண்டு குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 50 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள சர்தார் முகமது தாவுத் கான் ராணுவ மருத்துவமனை மற்றும் அதன் அருகே இன்று இரண்டு குண்டு வெடிப்பு வெடிச்சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்டதாகவும்,சாட்சியங்கள் சிலர் செய்தி ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும்,காபூலில் நிகழ்ந்த இரண்டு குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் படுகாயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
“நான் மருத்துவமனைக்குள் இருக்கிறேன்.முதல் சோதனைச் சாவடியில் இருந்து ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது. நாங்கள் பாதுகாப்பான அறைகளுக்குச் செல்லுமாறு கூறப்பட்டோம். துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்கிறது,” என்று சர்தார் முகமது தாவுத் கான் மருத்துவமனையின் மருத்துவர் செய்தி நிறுவனமான AFP இடம் கூறியுள்ளார்.
அமெரிக்க ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு தசாப்த கால கிளர்ச்சியைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து அவ்வப்போது துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்,காபூலில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.அதனைத் தொடர்ந்து,துப்பாக்கிசூடும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இரண்டு குண்டுவெடிப்புகளையும் தலிபான் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
மேலும்,”இராணுவ மருத்துவமனையின் வாயிலில் ஒரு வெடிப்பு நிகழ்ந்துள்ளது, இரண்டாவது மருத்துவமனைக்கு அருகில் வெடித்துள்ளது, இது எங்களின் ஆரம்ப தகவல், மேலும் விவரங்களை பின்னர் வழங்குவோம்” என்று அவர் AFP இடம் கூறினார்.
இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன?, இது பயங்கரவாத தாக்குதலா? என்பது குறித்து தலிபான் அதிகாரிகளிடம் இருந்து இதுவரை எந்த கருத்தும் வெளிவரவில்லை.மேலும்,இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு குழுவும் உரிமை கோரவில்லை.
இதற்கு முன்னதாக மருத்துவமனை 2017 இல் தாக்கப்பட்டது,அப்போது, துப்பாக்கி ஏந்தியவர்கள் மருத்துவ பணியாளர்கள் போல் மாறுவேடமிட்டு குறைந்தது 30 பேரைக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.