உண்மையிலேயே மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா? அறிவியல் ரீதியான உண்மையை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!
உண்மையிலேயே மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது குறித்து அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. அதில் மஞ்சளில் குர்குமின் எனும் பாலிபினாலிக் வேதியியல் பொருள் அடங்கியுள்ளதால் அது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தி நோயெதிர்ப்பு மண்டலத்தை சீர் அமைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆசியாவை தாயகமாகக் கொண்ட ஏழைகளின் குங்குமப்பூ என்று அழைக்கப்படக்கூடிய மிக சக்திவாய்ந்த மற்றும் அதிகளவு பயன்களை கொண்ட ஒன்று தான் மஞ்சள். இந்த மஞ்சளில் குர்குமின் என்னும் பாலிபினாலிக் வேதியல் பொருள் அடங்கி உள்ளதாக அண்மையில் ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள குர்குமின் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இந்த மஞ்சளில் வைட்டமின் ஏ, தயாமின் பி1, ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை அடங்கியுள்ளது.
இதன் காரணமாக உடலுக்கு இது மிகவும் நன்மை பயக்கிறது. பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தவும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படக்கூடிய ஒரு பொருளாக இது காணப்படுகிறது. மேலும் இந்த மஞ்சள் மூளை மற்றும் அது தொடர்பான நோய்களையும் மன அழுத்த பிரச்சனைகளை போக்கும் ஆற்றல் கொண்டது எனவும் அறிவியல் ஆராய்ச்சி மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இந்த மஞ்சளில் உள்ள அளவற்ற நன்மைகள் குறித்து சிலவற்றை நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
மஞ்சளின் நன்மைகள்
மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் வேதியயல் பொருள் காரணமாக உடலில் ஏற்படக்கூடிய நோய்கள் மற்றும் நோய்களினால் ஏற்படக்கூடிய அழற்சி ஆகியவற்றையும் கிருமிகளையும் எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் மஞ்சள் உடலில் ஆற்றல் திறனை அதிகரித்து, புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுவதோடு மூட்டு தொடர்பான பிரச்சினைகள் நீக்கவும் மஞ்சள் உதவுகிறது. மேலும் இரப்பை சிக்கல்களை நீக்கி வயிற்றில் உருவாகக்கூடிய வாயு கோளாறு மற்றும் அஜீரண கோளாறுகளை நீக்க உதவுகிறது. மூச்சுக்குழாய் பிரச்சினைகள் நீக்க உதவுவதுடன், பெரியவர்களுக்கு காச நோயில் இருந்து விடுதலை அளிக்க உதவுகிறது.
மூச்சு குழாய் அழற்சி உள்ளவர்கள் மஞ்சள் தூளை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து ஒரு நாளைக்கு மூன்று முறை எடுத்துக் கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கும். தோல் வலி மற்றும் தோலில் பருக்கள், தொழுநோய் புண்கள் ஆகியவற்றை நீக்க இவை உதவுவதுடன், உட்புற காயங்களை போக்குவதற்கும் நல்ல மருந்தாக பயன்படுகிறது. மேலும் விரலிமஞ்சள் என்று அழைக்கக் கூடிய ஒருவகை மஞ்சளை நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு அந்த புகையை மூக்கின் வழியாக உள்ளே இழுக்கும் பொழுது குழந்தைகளுக்கான மூக்கடைப்பு நீங்கும்.
வெட்டுக் காயத்தை குணப்படுத்த உதவுவதுடன், கண் வலி இருப்பவர்களுக்கு சுத்தமான நீரில் மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டிய நீரில் துணியை நனைத்து கண்களின் மேல் தடவிக் கொள்ளும் பொழுது கண் வலியும் குறையும். இவ்வளவு நன்மைகள் கொண்ட மஞ்சள் முழு உடலிலும் காணப்படக்கூடிய அனைத்து நோய்களுக்கும் எதிரான சக்தியாக பயன்படுகிறது.