பார்லர் போகாமல் வீட்டிலிருந்தபடியே முடியை நேராக மாற்ற வேண்டுமா…?
பல பெண்கள் நீண்ட அடர்த்தியான தலைமுடி தங்களுக்கும் இருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். அதிலும் சில பெண்கள் தங்களது முடி பளபளப்பாக நேராக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதற்காக பார்லருக்கு சென்று ரசாயனங்களை பயன்படுத்தி முடியை நேராக மாற்றிக்கொள்வார்கள்.
இதனால் பணமும் அதிக அளவில் செலவாகும், நமது முடியும் நாளடைவில் சேதம் ஆகிவிடும். இன்று வீட்டிலேயே முடியை நேராக மாற்றக்கூடிய ஜெல் ஒன்றை தயாரித்து நாம் பயன்படுத்தலாம். எப்படி இந்த ஜெல்லை இயற்கை முறையில் வீட்டிலேயே தயாரிப்பது என்பது குறித்தும், இதை உபயோகிக்கும் முறை குறித்தும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவையானவை
- கற்றாலை ஜெல் – 2 டீஸ்பூன்
- ஆமணக்கு எண்ணெய் – டீஸ்பூன்
- தேன் – 2 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
- ஆளி விதை – 2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் ஆளி விதைகளை சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை கொதிக்க விடவும். அதன் பின்பு இந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். பின்பு இதனுடன் கற்றாலை ஜெல், தேன், எலுமிச்சை சாறு மற்றும் ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
உபயோகிக்கும் முறை
முதலில் தலைமுடியை சற்று வெதுவெதுப்பான நீரால் ஈரப்படுத்திக் கொள்ளவும். அதன் பின்பு முடியை இரண்டு பகுதிகளாக பிரித்து, நடுவில் இருந்து இந்த ஜெல்லை தடவ ஆரம்பிக்க வேண்டும். நன்கு முடியின் வேர்கள் மற்றும் முனைகள் வரை பரவும்படி தடவிக் கொள்ளவும். இந்த ஜெல்லை தலைமுடியில் தடவி 30 நிமிடம் கழித்து முடியை அலசி விடவும். அவ்வளவு தான், இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்கள் முடி நேராக பளபளப்பாக மாறிவிடும்.